திராவிட அரசியல்!


முன்னுரை:
திராவிட அரசியல் பற்றியும் அதன் கொள்கை பற்றியும் சமீப காலங்களில் மிகப்பெரும் விவாதங்கள் நடைபெறுகின்றன. அப்படி என்ன சாதித்துவிட்டன திராவிடக்கட்சிகள்? ஒரு முன்னேற்றமும் இல்லை, மாநிலமே சீரழிந்து போய்விட்டது என்ற பொய் பரப்புரையை துவங்கி விட்டிருக்கிறார்கள் பலர். அந்த நிலையில் தான் இப்படி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என்று எனக்கு தோன்றியது. இனி வரும் பத்திகளில் திராவிட கட்சிகளின் துவக்கம், அவர்களில் அரசியல் கொள்கை, ஆரம்பம், பின் அவர்கள் வழி வந்த ஆட்சி இவற்றை பற்றி சற்றே விரிவாக எனக்கு தெரிந்த அளவுக்கு எழுதப் போகிறேன். ஏதேனும் பிழை இருப்பின் திருத்தவும். முடிந்தளவு சரியான தரவுகளையும், புள்ளி விவரங்களையும் தர முயற்சிக்கிறேன்!

திராவிடம்:
திராவிடம் என்ற சொல் தமிழம் என்ற சொல்லிலிருந்து திரிந்து வந்ததாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும், அம்பேத்கரும் கூறுகின்றனர்.
தமிழம் -> த்ரமிளம் -> த்ரவிடம் -> திராவிடம்
ஆரியம், மராட்டியம், வங்காளம் போன்று தமிழன் என்றொரு தனி இனத்தின் பெயரே தமிழம், திராவிடம் என்பது. கி.மு. முதல் நூற்றாண்டிலேயே திராவிடம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுவும் மனுஸ்மிருதியில்! பின்னரும் வடமொழி இலக்கியங்களில் பல இடங்களில் திராவிட என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 17-ஆம் நூற்றாண்டில் கொண்டு வரப்பட்ட இந்து மதம் என்கிற சொல்லாடலைவிட திராவிடஎன்கிற இனத்தின் அடையாளம் மிகப்பழையது என்பது நிறுவப்படுகிறது. எனவே வெறுமனே இதெல்லாம் பெரியாரின் சதி என்று அறைகூவலிடுவது அர்த்தமற்றதாகிறது!

தென்னகம் முழுமையும் தான் திராவிட நாடு, அதன் மக்கள் மட்டும் தான் திராவிடர் என்பதில்லை. தமிழரின் நாகரிகத்தை, எழுத்தை ஆராய்ந்த ஈராஸ் பாதிரியார் தமிழ் எழுத்துக்கள் மற்ற தொன்மை நாகரிக எழுத்துக்களுடன் ஒன்றிணைந்திருப்பதை கண்டறிந்தார். தமிழின், திராவிடத்தின் தொன்மையை அறிந்த அவர், தான் 'ஸ்பெயினில் உள்ள திராவிடன்' (I am Dravidian from Spain) என்று அறிவித்துக்கொண்டார். மிக மூத்தகுடிகளில் ஒருவராகத்தான் நாம் இருந்திருக்கிறோம்! ஒரு காலத்தில் இன்றைய இந்திய துணைக்கண்டம் முழுமையும் பேசப்பட்ட மொழி தமிழ் என்பது ஆய்வாளர்கள் பலரின் கருத்து. பல்வேறு ஆய்வு முடிவுகளும் இதை உறுதி செய்கின்றன.
(தமிழரின் தொன்மையும், வாழ்ந்து வந்த நிலப்பரப்பையும் பற்றி இன்னொரு கட்டுரையில் விரிவாய் எழுதுகிறேன். இப்போதைக்கு திராவிட கட்சிகளை பற்றி மட்டும்)

தற்கால திராவிட இயக்கங்கள்:
திராவிட இயக்க போராளிகள், அரசியல்வாதிகளின் முதன்மையான நோக்கம் இறை மறுப்பு கிடையாது. சமூகநீதி தான் அவர்களின் முதன்மை கொள்கை. சாதி மறுப்பு, இட ஒதுக்கீடு, சமூகநீதி இதையெல்லாம் முன்னிறுத்தியே திராவிடம் சார் இயக்கங்கள் இயங்கின, இயங்குகின்றன. சாதி மறுப்பு, சமூக நீதி, சம நீதி எல்லாம் பேசும் கம்யூனிச தத்துவ இயக்கம்தான் திராவிட இயக்கம். பின்னர் மாநில வளர்ச்சியை கருத்தில்கொண்டு தாராளமயமாக்கல் வரும்போது அதன் கம்யூனிச சித்தாந்தம் அடிபட்டு போகிறது.

திராவிட இயக்கங்கள் என்றாலே இறைமறுப்புதான் பேசுவார்கள் என்ற ரீதியில் ஒரு எண்ணம் பரவுகிறது. ஆனால் அந்த இறைமறுப்புக்கு அடிப்படை சாதி ஒழிப்புதான். இந்த சாதிய அடுக்குகளை தாங்கி பிடிப்பதில் பெரும் பங்கு வகிப்பது மதங்களும் அதிலிருக்கும் அரசியலும் தான். எனவே தான் அதை எதிர்த்தனர். இறை மறுத்தனர். அதிலிருந்து துவங்கும்போது தான் முழு சாதி ஒழிப்பு சாத்தியப்படும் என்று நம்பினர். அந்த வழியில் இன்றும் பயணிக்கின்றனர்.

இன்னமும் நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சாதிப்பெயரை தன் பெயருக்கு பின்னால் இணைத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கும் போது நம் மாநிலத்தில் அதை தவிர்க்க வைத்தது முதல் வெற்றி. பொது இடங்களில் வெளிப்படையாய் சாதி பற்றி பேச வெட்கப்பட்டது அடுத்த படிநிலை. இது இன்னும் முன்னேறி ஒருநாள் நிச்சயம் சாதியற்று போகும் என்று நம்புவோம்!

1901-ல் சென்னை மாகாணத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் அரசே கூட பிராமணர்கள் 3.4%, சூத்திரர்கள் 94.3% என்று குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட நிலையில் தான் நாடு முழுவதும் இருந்தது, தமிழகம் உட்பட. அதே காலக்கட்டத்தில் உணவு விடுதிகளில் பஞ்சமர்கள், நாய்களும், குஷ்டரோகிகளும் உள்ளே நுழையக்கூடாதுஎன்று எழுதிப்போட்டிருந்தனர். அந்த அளவுக்கு அடிமைத்தனம். மேற்சொன்ன வரியை கூர்ந்து படியுங்கள், நாய்களுக்கு படிக்க தெரியுமா என்ன? பிறகு ஏன் அதையும் சேர்த்து எழுதினார்கள் என்று சிந்தியுங்கள்.

ஒரு நூற்றாண்டு முன்பு வரை பெண் குழந்தைகள் மிகச் சிறுவயதிலேயே, ஒரு வயதில் கூட விதவை ஆகியிருக்கின்றனர் என்றால் அன்று இருந்த நிலைமையை கண் முன் நிறுத்திப்பாருங்கள்.

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் துவங்கிய ஜஸ்டிஸ் செய்தித்தாளின் பெயரிலேயே அந்த கட்சி அழைக்கப்பட்டது. ஜஸ்டிஸ் பார்ட்டிஎன்று பரவலாக அறியப்பட்ட இயக்கத்தின் தமிழாக்கம் தான் நீதிக் கட்சி’. 1920-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியை கைபற்றியது நீதிக்கட்சி. பின்னாளில் பெரியார் இவ்வியக்கத்தில் இணைந்து அதை திராவிடர் கழகம் ஆக்கினார். இனி இந்த இயக்கம் எந்த தேர்தலிலும் போட்டியிடாது என்றும் அறிவித்தார். அதிலிருந்து முக்கியத் தலைவர்களுடன் விலகி அண்ணா துவங்கியது தான் திராவிட முன்னேற்றக் கழகம்’. பின்னர் அதிலிருந்து பிரிந்து எம்ஜியார்துவக்கியது தான் அண்ணா திமுக’. பின்னர் திமுக-வில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டது. அதிலிருந்து பிரிந்து வந்தவர் தான் வைகோ. மறுமலர்ச்சி திமுகஎன்ற கட்சியை துவக்கினார். தாய்க் கழகமான தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில்துவங்கி இன்று வரை பல பிளவுகள், பிரிவுகள் நடந்தாலும் ஆட்சி பீடத்தில் இருந்து இறங்காமல் பீடு நடை போடுகின்றது திராவிடக் கட்சிகள்.

இனி திராவிட ஆட்சி சாதித்தவை பற்றி பார்ப்போம்!



சமூகநீதி திட்டங்கள்:
  • மதிய உணவுத்திட்டத்தினால் பள்ளிக்கு செல்ல துவங்கிய குழந்தைகள் ஏராளம். அத்தகைய மதிய உணவுத்திட்டத்தை முதன்முதலில் துவக்கியவர் காமராசர் அல்ல, ‘பிட்டி. தியாகராயர். 1920-ல் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றிய நீதிக்கட்சியின் ஆட்சியில்தான் முதன்முதலில் சென்னை மாநகராட்சி பள்ளியில் மதிய உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தியாவுக்கே முன்னோடியாக முதலில் இந்த திட்டத்தை செயல்படுத்தியது நீதிக்கட்சியின் ஆட்சியில் தான். இந்த நீதிக்கட்சி தான் இன்றைய திராவிடக் கட்சிகளில் தாய்க்கட்சி!
  • இங்கிலாந்து நாட்டிற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னரே, அதாவது 1921-லேயே பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுவிட்டது. நீதிக்கட்சி ஆட்சியில். அதன் நீட்சியாகத்தான் அதிமுக அரசு உள்ளாட்சியில் உள்ள இடங்களில் பெண்களுக்கு 50% அளித்துள்ளது.
  • பெண்களை கோவிலுக்கு பொட்டு கட்டிவிட்டு, இறைவனுக்கு சேவை செய்வது என்ற பெயரில் நிகழ்ந்து வந்த கொடுமையை, ‘தேவரடியார் என்னும் முறையை முடிவுக்கு கொண்டு வரும் சட்டம் நீதிக்கட்சியின்அரசால் 1925-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது.
  • 1921 - 1930 வரை கல்வி நிலையங்களில் பல மாற்றங்கள் கொண்டு வந்தது நீதிக் கட்சியின் அரசு. பிராமணர் அல்லாதோரை பள்ளி, கல்லூரியில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முதல் இட ஒதுக்கீட்டுச் சட்டம் 1928-ல் இயற்றப்பட்டது. பஞ்சமர் என்ற சொல்லை நீக்கி ஆதித்திராவிடர் என்று மாற்றினர்.
  • சமூகநீதியில் திராவிடக் கட்சிகள் என்றுமே சமரசம் செய்து கொண்டது இல்லை எனலாம். இன்று தமிழ்நாட்டில் இருக்கும் இடஒதுக்கீட்டு சதவிகிதம் 69%. நீதிக் கட்சியின் காலத்தில் துவக்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு நிலைப்பாடு, இன்றுவரை தொடர்ந்திருக்கிறது. அதனால் விளைந்த நன்மைகள் என்பது ஏராளம்.
  • 1969-ல் கை ரிக்‌ஷாவை ஒழித்ததோடு அதுவரை கை ரிக்‌ஷா இழுத்துப் பிழைத்தவர்களுக்கு இலவசமாக சைக்கிள் ரிகஷா வழங்கச் செய்து அவர்களின் வயிறு காயாமலும் பார்த்துக்கொண்டது அரசு. ஆனால் கம்யூனிஸ்ட் மாநிலம் என்று சொல்லப்படும் மேற்கு வங்காளத்தில் கூட கை ரிக்‌ஷா ஒழிப்புக்கான முயற்சி 2005-ல் தான் எடுக்கப்படுகிறது.
  • இந்தியாவுக்கே வழிகாட்டியாய் துவக்கப்பட்ட திட்டம் தான் குடிசை மாற்று வாரியம். 1970 செப்டம்பர் மாதம் தமிழக அரசால் துவக்கப்பட்டது.   விவசாயத் தொழிலாளர்களுக்கு வீட்டுமனை சொந்தமாக்கும் சட்டம், மத்திய அரசால் கொண்டுவரும் முன்னரே நில உச்சவரம்புச்சட்டம் என பல சாதனைகள் செய்தது இந்த அரசுகள் தான்.
  • அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தை 1970-லேயே கருணாநிதி தலைமையிலான அரசு நிறைவேற்றியது. ஆனால் அதுவரை கோயில் அதிகாரத்தில் இருந்தவர்கள் வெகுண்டெழுந்து வழக்கு தொடர்ந்து சட்டத்திற்கு தடை வாங்கிவிட்டார்கள். பின் மீண்டும் 2006-ல் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, மீண்டும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், தகுதி தான் தேவை என்று அறிவிக்கப்பட்டது. அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சி நிலையங்களும் துவங்கப்பட்டு, ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.
  • சிறுபான்மையினரை அரசு வேலைக்கு எடுக்க காங்கிரஸ் காலங்களிலேயே தயக்கம் இருந்தது. அதை தகர்த்தது திராவிட அரசுகள் தான்.
  • சுயமரியாதை திருமணம் என்பது, திராவிட இயக்கத்தின் பெரும் வெற்றிகளில் ஒன்று. வேதங்களும், மந்திரங்களும், போதனைகளும், மத தூதுவர்களும் இன்றி, நான் உனக்கு, நீ எனக்கு என்று உறுதி ஏற்கும் வண்ணம் நிகழும் திருமணம் தான் சுயமரியாதை திருமணம். அதை அங்கீகரிக்கும் வண்ணம் அதை சட்டமாக இயற்றினார் அண்ணா.
  • இந்தியாவில் 2002-ல் கட்டாயக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டில் கட்டாய ஆரம்பக் கல்வி சட்டம் 1994-லேயே கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பல திட்டங்களில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

சமுதாயக் கட்டமைப்பு:
  • 1891-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு அதிர்ச்சி முடிவுகளை தந்தது.
    i) அன்றைய மதறாஸ் மாகாணத்தில் சராசரி ஆயுள் 23 வயதாக தான் இருந்தது 
    ii) அன்று படித்தவர்களில் பெரும்பாலானோர் உயர்சாதியினர், பிராமணர்கள்
    iii) இன்று சராசரி ஆயுள் 70 ஆண்டுகள். கல்வி முன்னேற்றம் குறித்து நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
  • இந்தி எதிர்ப்பு போராட்டத்தோடு நில்லாமல், ஆட்சிக்கு வந்த கையோடுஇருமொழிக் கொள்கையைசட்டமாக்கி இந்திக்கு நிரந்தர பூட்டு போட்டார் அண்ணா. இன்று கர்நாடகம் முதலிய மாநிலங்கள் மெல்ல தாய்மொழியின் அவசியத்தையும், அதன் வழிக்கல்வி பற்றிய பேச்சையும் துவங்கியிருக்கிறார்கள்.
  • தன் மொத்த வருவாயில் கல்விக்காக மத்திய அரசு செலவிடுவது 3.2%. தமிழகம் 10.2% செலவிடுகிறது. பொதுச் சுகாதாரத்துக்கு மத்திய அரசு 1.5% சதவிகிதம் செலவிடும் போது, தமிழகமோ 13% செலவிடுகிறது.
  • விவசாய கடன் தள்ளுபடி, தலித்களுக்கு வழங்கப்படும் தாட்கோ (TAHDCO) கடன் தள்ளுபடி என என்றுமே அடிமட்ட மக்களுக்கு ஆதரவான அரசாகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யும் அரசாகவும் தான் செயல்பட்டு வருகிறது.
  • தன் முதல் ஆட்சிக் காலத்திலேயே அனைவருக்கும் 100% மின்சாரம் என்கிற நோக்கிலேயே செயல்பட்டது திமுக அரசு. அந்த நிலையை முதலில் அடைந்த மாநிலம் நம்முடையது தான்.
  • இன்னுமொரு முன்னோடித்திட்டம் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம். அரசே எடுத்து செயல்படுத்துகிறது. மத்திய அரசு 2015-ல் தான் செயல்படுத்துகிறது.
  • சாதி ஒழிப்பு முயற்சியில் பெரியார் நினைவுச் சமத்துவபுரம் ஒரு மைல்கல். எல்லா இடங்களிலும் இரண்டாக நிற்கும் இந்தியாவை ஒன்று கலக்கும் வண்ணம் துவங்கப்பட்டது தான் சமத்துவபுரம். எல்லா சாதியினரையும் ஒற்றை நகரமைப்பில் அமர்த்தியது இந்தத்திட்டம்.
  • 1971-லேயே நில உச்சவரம்பு சட்டம் கொண்டு வரப்பட்டு, 98% விவசாயிகள் குறு விவசாயிகள் என அறிவிக்கப்பட்டனர்.
  • உழவர் சந்தை, இலவச மின்சாரம், குறைந்த வட்டி கடன், கடன் சுமை அதிகரிக்கும் போது கடன் தள்ளுபடி என பல விவசாய சார்பு திட்டங்கள்.
  • 1989-ல் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. அதேபோல் குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டது.

அரசியல் நிலைகள்:
  • மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதே திமுகவின் கொள்கையாக இருந்தது. 1988-ல் திமுகவின் முன்னெடுப்பில் உருவானது மூன்றாவது அணியின் ஆட்சி. ஆனாலும் ஒற்றுமையின்மை காரணமாகவும், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுக்காக அரசு எடுத்த நடவடிக்கைக்காவும் அந்த ஆட்சி 11 மாதங்களிலேயே கலைக்கப்பட்டது. மூன்றாவது அணியின் சாத்தியத்தை உறுதிப்படுத்திய ஒரு முதல் மாற்றம். அதன் பின்னர் மத்தியில் ஆட்சியில் பங்கு வகிப்பது வாடிக்கையானது.
  • என்றும் இக்கட்சிகள் மீது சொல்லப்படும் இன்னொரு குற்றச்சாட்டு இவர்கள் எப்போதும் கலகம் செய்பவர்கள், பிரிவினை பேசுபவர்கள் என்பது தான். ஆனால் அரசோ, மக்களோ என்றுமே பிரிவினை நினைத்தது இல்லை. நம்மை வஞ்சிக்கும்போது அதற்கான எதிர்க்குரல் எழுப்பவும் தவறியதில்லை. அதற்கான எடுத்துக்காட்டுகள் தான் வங்கதேச பிரச்சனையின்போது மத்திய அரசுக்கு’ 6 கோடி ரூபாய் நிதி உதவி அளித்தது, குஜராத் பூகம்பத்தின் போது முன்னின்று தனி மாநிலமாய் பெரும் உதவிகள் செய்தது என நிறைய இருக்கின்றன.
  • மாநில சுயாட்சி தத்துவத்தை முன்னிறுத்தி அதில் வெற்றியும் கண்டு, சுயமரியாதை மிக்க இயக்கத்தையும், மக்களையும் வளர்தெடுத்தது இன்றைய திராவிட இயக்கங்கள் என்றால் அது மிகையாகாது. இந்து-இந்தி-இந்துஸ்தான் என்று ஒற்றைத் தேசமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தேசியக் கட்சிகளையும் மத்திய ஆட்சியையும் தன் நிலப்பரப்புக்குள் காலூன்ற விட்டதில்லை. இந்தி எதிர்ப்பை 1965-லேயே நிகழ்த்தியது திராவிட இயக்கங்கள். ஆனால் பல வருடங்கள் கழித்து, அதன் விளைவை உணர்ந்து, இன்று தான் இந்தி பேசாத மாநிலங்கள் ஒவ்வொன்றாக முனக ஆரம்பித்து இருக்கிறார்கள்.
  • 1989-ல் நிகழ்ந்த பெரும் மாற்றத்தில் முக்கிய பங்கு திமுக தான். மூன்றாவது அணியின் ஆட்சி அமைந்தது அன்று தான். வி.பி.சிங் தலைமையிலான அரசு அமைந்தது. அந்த அரசு சிறிது காலமே ஆட்சியில் இருந்தாலும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை தேசிய அளவில் நிறைவேற்றியது அந்த அரசின் முக்கிய சாதனை.


மாநில சுயஉரிமை:
  • இன்று பல்நோக்கு மருத்துவமனையாக மாறி நிற்கும் புதிய தலைமைச் செயலகத்தின் வரலாறு சற்றே பெரிதானது. தமிழ்நாட்டின் பழைய தலைமைச் செயலகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இன்னும் இருக்கிறது. அதற்கு வெள்ளையடிப்பதற்குக் கூட தமிழக அரசுக்கு நேரடி உரிமை இல்லை. அந்த இயலாமையை அகற்றத் தான் புதிய செயலகம் கட்டப்பட்டது. இதுதான் உலகிலேயே முதல் பசுமை சட்டமன்றக் கட்டிடம் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில சுய உரிமைகளுக்கான குரலாகத்தான் இதைப் பார்க்க முடியும்.
  • தேவையான சமயங்களில் மத்திய அரசோடு இணக்கமாக இருந்து நம் மாநிலத்துக்கு தேவையானதை செய்து கொண்டாலும், மாநில உரிமைகளுக்காகவும், மத்திய அரசை எதிர்த்தும் குரல் கொடுத்ததற்காக இரண்டு முறை ஆட்சி கலைப்பை சந்தித்தது.



கட்டுமானங்கள்:
  • பேர்சொல்லும் கட்டுமானங்களில் அதிக ஆர்வம் காட்டுவது திமுக அரசு. அதன் ஆட்சிக்காலத்தின் தான் 1970-களில் அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்டது. இன்று இருக்கும் கத்திபாரா சந்திப்பு கூட அவ்வகை மேம்பாலங்களில் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகும்.
  • அடுத்ததாக அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகங்களில் ஒன்று. கிட்டதட்ட 12 லட்சம் புத்தகங்கள் கொள்ளளவு கொண்ட மிகப் பெரிய நூலகம்.
  • இன்று மத்திய அரசு அறிவித்திருக்கும் உழவர் சந்தைகளை 1999-லேயே தமிழகத்தில் கொண்டு வந்தனர். இடைத்தரகர்களின் பேரம் கிடையாது, நேரடி விற்பனை, சந்தை கடைகளுக்கு வாடகை கிடையாது. அரசுப்பேருந்துகளில் போக்குவரத்து கட்டணம் கிடையாது, தராசும் படிக்கற்களும் இலவசம் என விவசாயிகளின் நலன் போற்றும் திட்டமாக அறிவிக்கப்பட்டு 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


தமிழ்மொழி பற்று:
  • திராவிடத்தின் தமிழ்மொழி பற்று என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை. சாலைப் பெயர்களை தமிழாக்கம் செய்தது, அரசு முத்திரையில் இந்தி நீக்கி தமிழ் சேர்த்தது, அரசு கட்டிடங்கள், அலுவலகங்கள் அனைத்துக்கும் தமிழில் பெயர், உலகத்தமிழ் மாநாடு, ஐயன் வள்ளுவனுக்கு சிலை என ஏராளமான பணி ஆற்றியுள்ளனர்.
  • தமிழ், தமிழர், தமிழ்நாடு என அனைத்துக்கும் உலக அடையாளமாய் இருப்பது திருக்குறளும், திருவள்ளுவரும் தான். அப்படிப்பட்ட திருவள்ளுவரின் சிலையை தென்கோடியில் நிறுத்தி, இந்தியா இங்கே முடிவதில்லை, இங்கு தான் துவங்குகிறது இந்தியா என்று உரக்கச் சொல்லியது ஒரு சாதனை. இன்றும் தமிழ்நாட்டின் அடையாளமாய் அதைக்குறிப்பிடலாம். 133 அடியில் அறத்துப்பாலை குறிக்கும் வண்ணம் 38 அடியில் அறபீடமும், பொருள் இன்பத்துப்பாலை குறிக்கும் வண்ணம் உடல் 95 அடியிலும் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
  • பல்வேறு இடங்களில் தமிழையும் பகுத்தறிவையும் கொண்டு சேர்த்தது திமுக. மதறாஸ் மாநிலம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தார் அண்ணா. திமுகவின் முதல் அமைச்சரவை பதவி ஏற்கும்போதே, ‘இறைவன் மீது ஆணையாகஎன்பதற்கு பதிலாக உளமாற உறுதி கூறுகிறேன்என்று சொல்லி பதவி ஏற்றார்கள். அரசு அலுவலகங்களில் சமயம், மதம் சார்ந்த புகைப்படங்கள் வைக்க தடை விதித்தனர். திருமண பத்திரிக்கைகளில் அன்பும் அறனும் உடைத்தாயின்என்ற குறளை போடும் பழக்கத்தை கொண்டு வந்தது திமுக. அரசுப்பேருந்து தோறும் குறள் எழுத வைத்தது இதே கழக ஆட்சி தான். சத்தியமேவ ஜெயதேஎன்று இந்தியில் இருந்ததை மாற்றி வாய்மையே வெல்லும்என்று தமிழ்படுத்தினார்கள். இன்னும் பல முன்னெடுப்புகள், மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
  • அரசு அலுவலகங்களில், பேருந்துகளில் திருக்குறள், கொச்சையாய் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளையும் நல்ல தமிழ்ப்படுத்தி பரவலாக்கியது (எ.கா: முடமானோர், ஊனமுற்றோர் என்பதை மாற்றி மாற்றுத்திறனாளி. அரவாணி என்பதை மாற்றி திருநங்கை)


தொழில் வளர்ச்சி:
  • 1997-லேயே தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கப்பட்டு, அதற்கென செயல் திட்டமும் வரையறுக்கப்பட்டது. அதில் வந்தது சென்னை டைடல் பார்க் முதலியவைகள். ஆனால் இந்திய அளவில் 2004-ல் தான் தகவல் தொழில்நுட்பக் கொள்கை வரையறுக்கப்படுகிறது. பல முதலீடுகளை ஈர்ப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும் முனைப்புக் கொண்டிருந்த அதே நேரம், மத்திய அரசுடன் இணைந்து உள்நாட்டு கூட்டு திட்டங்களை செயல் படுத்தவும் தவறவில்லை நம் அரசுகள். அதைத் தொடர்ந்து கோவை, திருச்சி, மதுரை, நெல்லை என பல இடங்களிலும் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 20 மாநிலத்துக்கு நிகரான மதிப்பை மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்கள் அளிக்கின்றன. இதில் மாகாராஷ்டிரத்துக்கு அடுத்த படியாக இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. தநா - 18.80 லட்சம் கோடி, குஜ - 10.94 லட்சம் கோடி, மபி - 7.35 லட்சம் கோடி, உபி - 12.37 லட்சம் கோடி, ராஜ- 7.67 லட்சம் கோடி
  • சுதந்திரத்துக்கு பின் 1960-களில் இருந்த தனிமனித வருமான அடிப்படையில் நமக்கும் முதலிடத்துக்கும் இருந்த வித்தியாசம் 11.5%. இன்று அது 7.8%-மாக குறைந்திருக்கிறது.


சில முக்கிய புள்ளிவிவரங்கள்:
  • இன்றைய நிலையில் மருத்துவ துறையில் சிறந்த கட்டமைப்புடன் இயங்கிவரும் மாநிலம் நம்முடையது என்று தைரியமாக சொல்லலாம். ஆரம்ப சுகாதார நிலையங்களின் பங்கு இதில் மிக அதிகம். குறிப்பிடப்பட வேண்டிய புள்ளிவிவரம் 1995-லேயே 84% பிரசவம் பயிற்சி பெற்ற தாதியரின் உதவியோடு நிகழ்ந்திருக்கிறது. அன்றைய தேசிய சராசரியே 42% தான். மிகச் சரியாக இரண்டு மடங்கு அதிகம்!
  • இந்தியாவிலேயே பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி சேர்பவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் தான் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டின் விகிதம் 38.2%. அதாவது தேசிய சராசரியை (20.4%) விட ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகம்.
  • இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 37 தமிழ்நாட்டில் இருப்பவை. குஜராத்தில் வெறும் 3. உபி, மபி, ராஜஸ்தான் ஆகியவற்றில் இருந்து ஒன்று கூட இல்லை.
  • சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 24 தமிழ்நாட்டில் இருப்பவை. குஜராத்தில் 2, மபி -0, உபி - 7, ராஜஸ்தான் - 4.
  • கல்வி விகிதாச்சாரம்: தமிழ்நாடு-80.33%, குஜராத் - 79%, மபி- 70%, உபி - 69%, ராஜஸ்தான் - 67%. தேசிய சராசரி - 74%
  • சிசு இறப்பு விகிதத்தில் 1000 குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் - 21, குஜராத்தில் - 36, மபி - 54, உபி - 50, ராஜஸ்தான் - 47, தேசிய சராசரியாக - 40 குழந்தைகள் இறக்கின்றன.
  • ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் எண்ணிக்கை: தநா - 79, குஜ - 112, மபி - 221, உபி - 285, ராஜ- 244, தேசிய சராசரி – 167
  • தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் விகிதம்: தநா - 86.7%, குஜ - 55.2%, மபி - 48.9%, உபி - 29.9%, ராஜ- 31.9%, தேசிய சராசரி - 51.2%.
  • ஆண் பெண் விகிதாச்சாரம் குறையும் போது பெண் சிசுக் கொலை அதிகம் என்று பொருள். 1000 ஆண்களுக்கு: தநா - 943, குஜ - 890, மபி - 918, உபி - 902, ராஜ- 888, தேசிய சராசரியாக - 919 பெண்கள் இருக்கின்றனர்.
  • குழந்தைகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு. தநா - 18%, குஜ - 33.5%, மபி - 40%, உபி - 45%, ராஜ- 32%, தேசிய சராசரி - 28%
  • மருத்துவர்களின் எண்ணிக்கை (1 லட்சம் மக்கள் தொகைக்கு) தநா - 149, குஜ - 87, மபி - 41, உபி - 31, ராஜ- 48, தேசிய சராசரி - 36 மருத்தவர்கள் உள்ளனர்.
  • மருத்துவத்தில் இந்தியாவிலேயே முன்னிலையில் நிற்கும் மாநிலமான தமிழ்நாட்டில் மொத்தம் 24 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. நாட்டில் உள்ள மொத்த மருத்துவ இடங்களில் (52965) தமிழ்நாட்டில் மட்டும் 5660 இடங்கள் உள்ளன (10%-க்கும் மேல்). (நீட் தேர்வுக்கான காரணம் புரிகிறதா?)
  • வறுமைக்கோட்டிற்கு கீழிருப்பவர்கள் சதவிகிதம் நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் குறைவு (11.28%). தேசிய சராசரி என்பது 21.92%. கிட்டதட்ட தேசிய சராசரியை விட சரி பாதி குறைவு.
  • இன்னும் ஏழ்மை சதவிகிதம், சராசரி ஆயுள் என பெரும்பாலான வளர்ச்சி குறியீட்டில் முன் நிற்கிறது தமிழகம்.
  • இதில் குறிப்பிட்டு நாம் குஜராத், ராஜஸ்தான் போன்ற பெரு மாநிலங்களோடு ஒப்பிடக்காரணம், இந்த மாநிலங்களை போன்று நமது மாநிலம் குஜராத்தி பொருளாதாரமோ, நீர் ஆதாரமோ, மக்கள் தொகை கணக்கிலோ, தேசிய கட்சிகளின் ஆட்சியோ நடைபெறும் மாநிலமோ கிடையாது. இது ஒரு குறிப்பிட்டு சொல்லவேண்டிய செய்தி.
  • குஜராத்தி பொருளாதாரம் பற்றிய சிறு குறிப்பு. நேரு காலத்தில் வந்த அன்சாரி குழு அறிக்கை, அந்தக் காலக்கட்டத்தில் 80% பொருளாதாரம் குஜராத்திகள் கையில் இருந்தது என்கிறது. குஜராத்திகள் மஹாராஷ்டிராவிலும், குஜராத்திலும் தான் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையிலிருந்து இன்று தொழிற் வளர்ச்சியில் குஜராத், மஹாராஷ்டிரத்துக்கு அடுத்த நிலையில் தமிழகம் நிற்பது பெரும் சாதனை.



இறுதியாய் ஒற்றை வரி. இந்த கட்டுரை முழுதும் கழக ஆட்சிகளின் வெள்ளைப் பக்கத்தை மட்டுமே காட்டியிருக்கிறேன். இது தாண்டி சொல்லவொண்ணா தீங்குகள் பல நிகழ்ந்திருக்கின்றன. மது துவங்கி ஊழல் வரை பல சான்றுகள் இருக்கின்றன. அதை மறுக்கவோ, நியாயப்படுத்தவோ நான் முயலவில்லை. ஆனால், இன்று நிகழும் பிரச்சாரமானது கழக ஆட்சி ஒன்றுமே செய்யாததை போலவும், காமராஜர் ஆட்சிக்கு பின் எதுவும் வளர்ச்சி எதுவும் நிகழவில்லை என்பது போலவும் பரப்பப்படுகிறது. அது அல்ல உண்மை நிலை என்று சொல்லவே இதை எழுதி இருக்கிறேன்.

முழுமையாய் படித்திருந்து உங்களுக்கு ஏதேனும் புது தகவல் நான் நல்கியிருந்தால் மகிழ்ச்சி. நன்றி!



-அ.ச.கி.

Comments

  1. அருமையான பதிவு,
    வாழ்த்துக்கள் தோழர்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழர்! 🙏🏻

      Delete
  2. இதையெடுத்து ஒரு ஏடாகவே மாற்றலாம்... திராவிட சிந்தனை இருக்கும் வரை நம் பெருமைகளை பார் போற்றும் என்பதில் ஐயமில்லை...

    ReplyDelete
  3. https://thozharmaniyarasan.blogspot.com/2018/10/blog-post.html?m=1&fbclid=IwAR0vLcpVorSfjiuHsUdK6z21LI8CNRp-LYPRloB9hKSIn0WRQcz_X78OO-8

    Read it.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!