சாதிவாரியான இட ஒதுக்கீடு!
சாதிவாரியான இட ஒதுக்கீடு!
இந்த தலைப்பை படித்தவுடன் சாதிவாரியான இடஒதுக்கீடு தவறென்று இரண்டு பேருக்கு தோன்றும்.
1. இட ஒதுக்கீடு பற்றிய முழுப்புரிதல் இல்லாமல் வேண்டாம் என்பவர்கள்
2. இட ஒதுக்கீடு பற்றிய புரிதலுடன், அது ‘சாதிவாரியான’ இட ஒதுக்கீடு அல்ல, ‘வகுப்புவாரியான’ இட ஒதுக்கீடு என்பவர்கள்
இக்கட்டுரை இரண்டு பேருக்குமானது தான். முதல் குழுவில் உள்ள தோழர்கள், ‘வகுப்புவாரி’ இட ஒதுக்கீடு என்ற வார்த்தையை மனதில் நிறுத்திக் கொண்டு மேலே படிக்க வேண்டுகிறேன். இரண்டாம் குழுவில் உள்ள தோழர்கள் இது முழுமையும் படித்து தவறுகளையும், விடுபட்ட கருத்துகளை சுட்டுமாறு வேண்டுகிறேன். இதில் இரண்டிலும் சேராத தோழர்கள் முழுக்கட்டுரையையும் கருத்துரையையும் படிக்கவும்.
இடஒதுக்கீட்டால் பல குடும்பங்கள் வளர்ந்து வருகின்றன. கூடவே இடஒதுக்கீட்டை பற்றிய விவாதங்களும் வளர்ந்து வருகின்றன. விவாதங்கள் வேதனைக்குரியதல்ல, ஆனால் பல இடங்களில் அத்தகைய விவாதங்களை முன்னெடுப்பது இட ஒதுக்கீட்டால் வளர்ந்து வந்தவர்கள் என்பது தான் வேதனைக்குரிய செய்தி!
இடஒதுக்கீட்டையும் அதன் வரலாற்றையும் பற்றி வேறோர் கட்டுரையில் (http://asaki-in-tamil.blogspot.in/2018/02/blog-post.html) மேலோட்டமாக எழுதியிருந்தேன். இந்த முறை சற்றே விரிவாக.
இடஒதுக்கீட்டின் இன்றைய நிலை:
இன்று பெரும்பான்மை மக்களின் கருத்தாக இருப்பது, தகுதியானவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதனால் தரமான மாணவர்கள் கல்லூரி பயில்வதில்லை, தரமான மருத்துவர்களும் பொறியாளர்களும் வெளிவருவதில்லை என்பது தான். மக்கள் மற்றும் நடுநிலையாளர்களின் கரிசனம் பாராட்டுக்குரியது தான்.
ஆனால் களத்தில் இருக்கும் உண்மை வேறுமாதிரியானது. வெறும் வாய்வார்த்தைகளால் இல்லாமல், முடிந்தவரை கணக்கீடுகளின் வழியாக நிறுவுகிறேன்.
புள்ளி விவரப்படி வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு சிகிச்சை பெற வருபவர்களில் 45 விழுக்காடு மக்கள் சென்னைக்கு வருகின்றனர். சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரென்று சொல்லும் வண்ணம் மருத்துவத்தில் வளர்ந்து நிற்கிறது.
பொறியியல் பற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும், வெளிநாடுகளுக்கு சேவை வழங்கும் அளவில் வளர்ந்து நிற்கும் துறை பற்றியும் பெரிதாய் சொல்ல தேவையில்லை. அவர்களெல்லாம் இந்த முறையில் படித்து பயன்பெற்று வந்தவர்கள் தான்.
50 ஆண்டுக்கும் மேலாய் இட ஒதுக்கீட்டில் படித்து தேர்வாகி உயரிடத்தில், நல்ல முறையில் பணி செய்பவர்கள் தான் இன்று இருக்கும் பெரும்பான்மையினர். பின் எப்படி வகுப்புவாரி இடஒதுக்கீடு தவறானதாக கொள்ள முடியும்?
இடஒதுக்கீட்டின் தேவையும் அவசியமும்:
முதிலில் வருமான அடிப்படையில் இடஒதுக்கீடு வேண்டும் என்று எண்ணுபவர் உட்பட அனைவரும் உணர வேண்டிய ஒரு செய்தி, இடஒதுக்கீட்டின் முக்கிய கொள்கை அல்லது குறிக்கோள் வருமானத்தை உயர்த்துவது அல்ல. அது முழுக்க முழுக்க சமூக உயர்வையும், கல்வியையும் அளிப்பதே ஆகும்.
சுமார் 60-70 ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழ்நிலையும் சமூக நிலையும் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
- உயர் சாதியினருக்கு தனி தெரு, கீழ் சாதியினருக்கு தனி தெரு இருந்தது. உயர்சாதியினரின் தெரு வழியே கீழ்சாதியினர் நடக்கக்கூட அனுமதி கிடையாது. அதை மீறும் போது கொலைகள் கூட சாதாரணமாக நடந்தன
- தெருக்கள் வழியே பிணங்கள்கூட தூக்கி செல்ல அனுமதி இல்லை. அதன் நீட்சிகள் இன்று வரை காணலாம்.
- தண்ணீர் குடிக்கக்கூட குவளைகள் தரப்பட மாட்டாது. தேங்காய் தொட்டிகளிலும், கைகளை குவித்து தாழ்த்தி பிடித்தும் தான் குடிக்க வேண்டிய நிலைமை இருந்தது. தீண்டாமையின் உச்சங்கள்
- பெண்கள் மேலாடை உடுத்த கூட தனியே வரி செலுத்த வேண்டி இருந்தது
- செருப்பணிந்து நடப்பது பெருங்குற்றமாகவும், தோளில் துண்டு போடுவது கூட செய்ய தகாத செயலாகவும் இருந்தது. அத்தனை அடிமை நிலை
அப்படிப்பட்ட மக்களில் யாரவாது அன்றைய காலத்தில் படித்திருக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு, கல்வியின் வாசம்கூட நுகராத மக்கள் கூட்டத்தை வெளிக்கொண்டு வர, வெளியுலகம் காண்பிக்க, கல்வியெனும் கடல் தொட நிறைய ஊக்கம் தேவை. அது போன்ற ஊக்கச்செயல்களில் ஒன்று தான் இந்த இடஒதுக்கீடு.
அதற்கு ஒரு சான்றாக பின்வரும் கணக்கெடுப்பை பார்த்தால் புரியும். 1922-ஆம் ஆண்டு மெட்ராஸ் பல்கலைக்கழகம் எடுத்த கணக்கீட்டின்படி பள்ளி மற்றும் கல்லூரி முடித்தவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 65% மேலானவர்கள் பிராமணர்களாக தான் இருந்திருக்கிறார்கள். மற்ற ஹிந்துக்களும் பிற மதத்தினரும் தாழ்த்தப்பட்டோர் எல்லாம் சேர்ந்து 30-35% சதவிகிதமாக இருந்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டிய செய்தி, மொத்த மக்கள் தொகையில் பிராமணர்கள் 3-5% தான்.

இந்த எண்ணிக்கை ஆதிக்கத்தின் பிரதிபலிப்பு, அடக்குமுறையின் அளவீடு, சாதிய கொடுமைகளின் உச்ச வெளிப்பாடு, தீண்டாமைகளின் மொத்த உருவம். முன்னமே சொன்னது போல் இது கல்வியில் இருந்த அடக்குமுறையின் ஒற்றை சான்று தான். இது தவிர இரட்டைக் குவளை முறை, கழிவறை பயன்படுத்த தடை, பள்ளி கல்லூரி கழிவறைகளை சுத்தம் செய்ய வற்புறுத்தல் போன்ற ஏராளமான சமூக தீங்குகள் இருந்தன.
ஆக அத்தனை நூறு ஆண்டுகளாய் அடிமைப்பட்டுக் கிடந்த ஒரு சமூகத்தை உயர்த்துதல் நோக்குடன், அவர்களுக்கு ஒரு உந்து சக்தி கொடுக்கும் நோக்குடன் கொண்டு வரப்பட்டது தான் வகுப்புவாரியான இட ஒதுக்கீடு.
ஒரு எளிதான புரிதல்:
அடுத்து இன்னொரு சாரார் எழுப்பும் கேள்வி அல்லது தூண்டிவிடும் வாதம் என்பது, ‘அதான் இத்தனை ஆண்டுகளாய் வகுப்புவாரி இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது அல்லவா? எல்லோரும் முன்னேறி விட்டனர். அதனால் இட ஒதுக்கீடு தேவையில்லை’ என்பதாகும். மக்களும் கண்மூடித்தனமாக அதை ஆதரித்து பரப்புகின்றனர். ஆனால் உண்மையில் நாம் அதை எப்படி அளவீடு செய்ய வேண்டும் என்ற புரிதல் நம்மில் பெரும்பான்மையினரிடம் இல்லை.
எவர் வேண்டுமானாலும் இனி வரும் ஆய்வினை அல்லது கேள்விக்கான பதிலை தேடிப்பார்க்கலாம்.
உயர் வகுப்பினரில், பிராமணர்களில் முதல் தலைமுறை பட்டதாரியினர் எவ்வளவு பேர். மற்ற மக்களில் முதல் தலைமுறைப் பட்டதாரி எவ்வளவு பேர். சமூகத்தில் உயர் பதவி வகிப்பவர்களில் எத்தனை சதவிகிதம் உயர் வகுப்பினர். எத்தனை சதவிகிதம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். இதுமாதிரி கணக்கீடுகளை கொண்டு பார்த்தால் தான் புரியும்.
அதற்காக வளர்ச்சியே இல்லை, சமூக நீதி வளரவே இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதேசமயம் சமநிலை எட்டப்படவில்லை, இடஒதுக்கீடு அதன் முழுப் பயனை அடையவில்லை என்பது தான் கள நிலவரம். அது இல்லாத வரை சமூக அமைதி, அணுக்கம், வளர்ச்சி இல்லாத வரை வகுப்பு வாரி இடஒதுக்கீட்டை மாற்றுதல் என்ற பேச்சு தேவையும், அவசியமும் அற்றது.
இடஒதுக்கீட்டின் அளவு:
தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் பொதுப் பிரிவினருக்கு (OC) 31%, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 26.5%, பிற்படுத்தப்பட்ட இசுலாமியருக்கு (BCM) 3.5% இடஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC) 20%, பட்டியல் பிரிவினருக்கு (SC) 15%, பட்டியல் பிரிவுகளில் ஒன்றான அருந்ததியருக்கு (SCA) 3% இடஒதுக்கீடும், பட்டியல் பழங்குடியினருக்கு (ST) 1% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு இல்லா இடங்கள்:
இட ஒதுக்கீடு இல்லா இடங்கள் பல இருக்கின்றன. உயர்கல்வி நிறுவனங்களும் அடக்கம். அதிலெல்லாம் சாதியின் ஆதிக்கத்தை சற்று உற்று கவனித்தால் புரியும்.
மிக எளிதாய் வெளிப்படையாய் நிகழும் இடம் ஒன்றுண்டு. ‘தமிழகக் கிரிக்கெட்’.
இதுவரை இந்திய அணிக்கு தேர்வானவர்கள் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்ட அல்ல பிற வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை காண்க.
இன்னமும் பல்கலை கழகங்களின் துணை வேந்தர் பொறுப்பு, நியமனங்களின் மூலம் வருபவர்கள், வெவ்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு நுழைவுத் தேர்வுகளின் மூலம் தேர்வாகி வருபவர்கள் எல்லாம் யாரென்று கவனிக்க வேண்டும். அவர்கள் எல்லாம் தேர்வாவதற்கு தகுதியும் அறிவு மட்டும் காரணம் என்று யாராவது நினைத்துக்கொண்டால் அதை அறிவீனம் என்று தான் கொள்ளமுடியும். ‘வாய்ப்பு’ பற்றி சிந்திக்க வேண்டும்.
இப்படி இடஒதுக்கீடு இல்லா இடங்களில் எல்லாம் உயர் சாதியினர் ஆதிக்கம் தான் அதிகமாய் இருக்கிறது என்பது கண்கூடான உண்மை!
இறுதி சொற்கள்:
வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக்காக வருத்தப்படும் அனைவருக்குமாய் ஒற்றைக்கேள்வி அல்லது கருத்து பகிர்வு:
இந்தியாவில் இன்னுமும் மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமை நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது. அதைச் செய்பவர்களை பற்றிய கரிசனமோ கருத்தியலோ யாரிடமாவது பேசியிருக்கிறார்களா? அந்த வேலை செய்பவர்கள் எல்லாம் யாரென்று கூர்ந்து கவனித்திருக்கிறார்களா? அது மொத்தமாய் ஒடுக்கப்பட்ட, அடக்கியாளப்பட்ட மக்கள் கூட்டத்தின் கையில் இருக்கிறதே அதை யாராவது சிந்தித்திருக்கிறோமா? அதில் என்றேனும் ஏன் இடஒதுக்கீடு சரியாய் இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ந்து கேள்வி எழுப்பியிருக்கிறோமா? இல்லை.
ஏனெனில் நம்மை பாதிக்காத எதையும், என்றும் நாம் சிந்திப்பது இல்லை. சுயநலம் என்பது ஒட்டி பிறந்த குணம், தவறு சொல்ல நியாயமில்லை.
ஆனால் ஒன்றை மறந்துவிடக்கூடாது. அடிப்பட்டு, அடிமைப்பட்டு, கொடுமை செய்யப்பட்டு கிடந்த நாம் இன்று சற்று நிமிர்ந்திருக்கிறோம். அதனால் உடனே என் சமூகமே உயிர்த்தெழுந்து மகிழ்ந்து கிடக்கிறது என்று பொருளல்ல. சற்றே கண் திறந்து பல ஊர் சென்று பாருங்கள், தினசரி படியுங்கள், ஊரில் என்னென்ன கொடுமைகள் நிகழ்கிறது இன்னமும் என்று கவனியுங்கள்.
குலத்தொழில் வற்புறுத்தல், தனிச் சுடுகாடு, பொதுப் பாதை மறுத்தல், தீண்டாமைச் சுவர், கௌரவக் கொலைகள், கோயில் நுழைவு தடுப்புகள் என ஏராளமான சமூகத் தீங்குகள் இருக்கின்றன.
இத்தனையும் கொண்டு அவன் வாய்ப்பும் வசதியும் பெற வேண்டும், அத்தனை போராட்டங்களையும் தாண்டி அவன் படிக்க வேண்டும். இதற்கு நிச்சயம் அவனுக்கு மற்றவர்களை தாண்டிய ஊக்கமும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். அதில் ஒன்று தான் இந்த இடஒதுக்கீடு.
அவன் என்ன தான் பொருளாதாரத்தில் முன்னேறி இருந்தாலும், சமூகக் கட்டமைப்பில் அவன் முன்னேற தலைமுறைகள் ஆகும். அவன் அடையாளத்தை இழந்து, அடக்குமுறையை இழந்து, ஆதிக்கத்தை தவிர்த்து, அவன் இன்னவனென்று அறியா சமூகத்தில் அவன் வாழக் கிடைக்கும்வரை இடஒதுக்கீடு அவசியமாகிறது.
நாட்டாமை படத்தில் ஒரு காட்சி வரும். சரத்குமார் ஊரில் பெரிய மனிதனாக (சாதியை வைத்து) காட்டப்படுவார். வினுச்சக்ரவர்த்தி பொருளாதாரத்தில் உயர்ந்தவராக காட்டப்படுவார். இருப்பினும் சரத்குமாரை பார்க்கும் போது கைகட்டி, கூனி நிற்கும்படி தான் அந்த சமூக அமைப்பு வினுச்சக்ரவர்த்தியை வைத்திருக்கும். இது தான் நான் சொல்ல விழையும் கருத்து. அடையாளம் இழக்காத வரை, மறக்காத வரை பொருளாதாரம் மட்டுமே போதாது.
https://www.quora.com/What-are-the-main-effects-of-the-reservation-system-on-Indias-development/answer/Mohan-Vanamalai?share=67756f25&srid=hnFHn
-அ.ச.கி.
Comments
Post a Comment