Skip to main content

இறப்பெனும் பெரு நிகழ்வு!

இறப்பெனும் பெரு நிகழ்வு!
காற்றுக்கும் துளைகளுக்கும்
இடையே காதல்
இசையாய் வருகிறது!
பார்வையின் ஊடே
பேசிய இசைதான்
காதலாய் மலர்கிறது!

நாட்களும் நொடிகளும்
உன்னால் நகர்ந்ததாய்
உன் நினைவால் நிறைந்ததாய்
கிடந்தன பல யுகம்!

காதலுக்கான வரைவுகளில்
கட்டுண்டிராமல்
பெரும்பான்மை இலக்கணங்களை
உடைத்து விட்டுதான் கலந்திருந்தோம்!
ஒரு நொடி பார்வைகளையே
காதல் என்று பெயர் சூட்டிக்கொண்டால்
நம் உறவை என்னவென்று சொல்வதுவோ?
தொட்டதை
தொடர்வதாய் இல்லாமல்
விட்டதை (விட்டு அதை)
விலகுவதாய் சொல்லாமல்
பழகியதை
பாழாக்கித்தான் போனோம்!

என் உயிர் பிழிந்து எடுத்த
மொத்த நினைவுகள் எதிலும்
உன் சுவடுகள் இல்லாமல் இல்லை!

ஆம். இப்போதெல்லாம் நீ
என்னுடன் பேசுவதில்லை தான்!
காதலெனும் கடல்தனில்
இளைப்பாறுவதில்லை தான்!
ஆனால்
தாஜ்மஹால் இடிந்து விட்டால்
காதல் இறந்தா போகும்?
கோழி கூவ மறுப்பதனால்
விடியல் மறந்தா போகும்?

சாதலும் காதலும் இல்லாத
உயிர் உலகில் இல்லை!
அந்த உயிரோடு உரசாத
எதுவும் காதலே இல்லை!

இறப்பெனும் பெரு நிகழ்வின்போது
உன் முகம் காண வேண்டும்!
இறுதியாய் ஒரு நொடி
உன் நிழலில் வாழ வேண்டும்!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!