தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (2) தொல்பழங்காலத்தலிருந்தே திராவிட இன மக்கள் அல்லது தமிழ்ப்பூர்வக்குடிகள் இந்தியா முழுமையும் பரவியிருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. சிந்துப்பகுதிகளில், மஹாராஷ்டிரத்தில், இலங்கையில், இன்ன பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் திராவிட குடியேற்றங்களுக்கான சான்றுகளை வெளிக்கொணர்ந்ததோடு, அதன் தொன்மையை, வளமையை உறுதிப்படுத்தியுள்ளன. பீஹார், வங்காளம், ஒரிஸா போன்ற இடங்களில் இன்றும் குய், குருக் போன்ற 14 தமிழின் கிளை மொழிகள் ( திராவிட மொழிக்குடும்பம் ) இன்றும் உயிர்த்திருப்பது தமிழர்கள் நாடெங்கிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நிறுவுகிறது. ஆரியர்களின் வருகையும் எழுச்சியும், அதனோடு ஒட்டி இங்கிருந்த பூர்வக்குடிகளின் வீழ்ச்சியும் தோல்வியும், அவர்களை தென்கோடி எல்லைக்கு தள்ளிவிட்டது எனலாம். ஹீராஸ் பாதிரியாரின் கூற்றுபடி ஹரப்பாவின் முத்திரைகளில் காணப்படும் மொழி திராவிட மொழிக்குடும்பத்தின் பெற்றோராகும். அந்த வகையில் திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியான தமிழே ஹரப்பாவின் முத்திரைகளில் காணப்படுவது என்று கொள்ள வேண்டும். பலுசிஸ்தானத்தில் காணப்படும் பிராஹ...