தமிழ்த்தந்தை வாழ்த்து!

தமிழ்த்தந்தை வாழ்த்து! (03/06/1924 - 07/08/2018)
——————————
குமரியில்
வள்ளுவனை நிறுத்தி
இந்தியா
இங்கிருந்து துவங்குகிறது என்றாய்!


கொச்சைத் தமிழ் நீக்கி - பல

கொஞ்சு தமிழ் செய்தாய்!
சிலம்பையும் குறளையும்
திசையெல்லாம் நெய்தாய்!


எழுபது எண்பது ஆண்டாய்

எழுத்து என்பது ஆண்டாய்!
தெற்கிலிருந்து உதித்த
முழுச் சூரிய துண்டாய்!


எழுதாத நாளில்லை

எதிர்க்காத ஆளில்லை
எம்கோன் தமிழ் எழுத - சிறந்த
எழுது கோளில்லை!


உடன்பிறப்புக் கடிதங்கள்

உற்சாக பானங்கள்!
உன் கரகரப்பு மோனங்கள்
உயிர்தடவும் கானங்கள்!


பெரியாருக்கு தடி அடையாளம்

அண்ணாவுக்கு பொடி அடையாளம்
உனக்கு என்றும் தமிழ்க்குடி அடையாளம்!


உன் மெய் பேணா திருந்ததனால்!

உன் மை பேனா திருத்தாதனால்!
உண்மை ஏனோ தெரிவில்லை - சொல்
வன்மை இராவணன் வரவில்லை!


என் தகையே

தாய்த் தமிழே
கலையே
கடலே
காதலே
கதிரே
கரகரப்பே!


எம் கோனே

தமிழ் தேனே
தெற்குச் சூரியனே
மடலே
கனலே
நெருப்பே
சுறுசுறுப்பே!


இதயத்தை இரவல் பெற்ற

இளவலே!
அண்ணாவிடம்
திருப்பித்தர போனாயோ?


தமிழுக்கான பணி முடிந்ததென்று

வேறு மொழிதேடி போனாயோ?


சூரியனே!

இந்நிலம் இனி பிழைப்பு கொள்ளும் என்றே
புது நிலத்தில் ஒளிவீச போனாயோ?


அஞ்சுமுறை முதல்வனே

அஞ்சுகத்தின் புதல்வனே
தெற்கிலிருந்து உதித்து
வடக்குவரை வாழ்ந்தவனே!


திருக்குவளை தந்தவனே

தீந்தமிழை ஈந்தவனே
தமிழ்க்கடலில் குதித்து
வான் தாண்டி போனவனே!


புறநானூற்றுத் தமிழே

புதுத்தமிழின் குமிழே
சமூகநீதியெல்லாம் விதைத்து
உறங்கிப் போன அமிழ்தே!


உன் சொல்லும்

என்றும் சொல்லும்
தமிழே என்றும் வெல்லும்!
#அசகி

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!