தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (1)
தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (1)
(நானறிந்த வரையிலான) பழந்தமிழர் வரலாற்றையும் அவர்தம் வாழ்க்கை முறையையும் அக, புற வாழ்க்கையினையும் தொகுத்து எழுதலாம் என்று எண்ணி துவங்குகிறேன். வரலாறு மிக நெடியது. சுருக்கிச் சொன்னாலும் ஒரு நாள் சொல்லலாம். அதனால் இதனை சின்னச்சின்ன தொடர் கட்டுரையாக எழுதுகிறேன். முதல் கட்டுரையில் தமிழர் பற்றிய சிறு முன்னுரை.
தமிழ்நாடு மரபார்ந்த வகையில் கடல்களையும் மலைகளையும் எல்லைகளாக கொண்டுள்ளது. கால ஓட்டத்தில் ஆந்திரம், கேரளம் போன்று தனி மொழிகள் கிளைத்து தனித்தனி மாநிலங்களாகிவிட இன்று இருக்கும் தமிழகம் மட்டும் தமிழ்நாடாகியிருக்கிறது. முதன்மை நகரங்களாக முறையே மதுரை, தஞ்சாவூர், கோயமுத்தூர் மற்றும் காஞ்சிபுரம் முறையே பாண்டிய, சோழ, சேர, தொண்டை மண்டலங்களாக இருந்தன. இவை தவிர வெவ்வேறு காலக்கட்டங்களில் இலங்கையின் ஈழமும் தமிழர் வாழ்நிலமாக இருந்திருக்கிறது.
தட்பவெப்ப நிலையிலும், இயற்கை வளங்களையும் கணக்கில் கொண்டால் தமிழகம் அவ்வளவு சிறப்பானது என்று கூறிவிட முடியாது. பெரும்பாலும் சூடு அதிகமான இடங்கள் தான். மழையை நம்பிய வெள்ளாமை என்பது குறைவுதான். பாசனம் தான் பெரும்பான்மை. மழையும் பெரும்பாலும் ஆண்டின் இறுதி இரண்டு மாதங்களில் தான் பொழியும். அதுவும் சொத்துக்கும், உயிருக்கும் சேதம் விளைவித்து தான் செல்லும்.
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களும், இன்ன பிற குறுநில மன்னர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வந்தனர். காலப்போக்கில் பழந்தமிழர் வழிப்பாட்டு முறை மறைந்து சமணம், பௌத்தம், கிறிஸ்துவம், சைவம், வைணவம் என்று வெவ்வேறு மதங்கள் ஊடுருவின. தம்முள் பல நேரங்களில் மோதிக்கொண்டன. ஒரு கட்டத்தில் ஹிந்துமதத்தின் ஏற்றத்துக்கு பின் பிற மதங்கள் ஒடுக்கப்பட்டன. மன்னர்களுடன் கைகோர்த்துக்கொண்டு ஆரியர்கள் அதிகாரத்தை கைப்பற்ற பூர்வகுடிகள் குறைத்து தீண்டதகாதவர்களாக சுருக்கப்பட்டனர்.
பின் பதினான்காம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் ஆப்கானிய படையெடுப்பின் அலையில், மதுரையில் சுல்தானிய அரசு அமைந்தது. பின்னர் விஜயநகரப் பேரரசின் எழுச்சிக்கு வழிவிட்டு நின்றது. அதன் பின்னர் இந்நிலம் பேரரசுகளின் தாயகம் என்ற பெயரை இழந்தது. அதிலிருந்து தெலுங்கரும், மராத்தியரும், கன்னடியரும் இந்நிலத்தின் உரிமைகளை தக்கவைத்துக் கொண்டனர்.
1795க்கு பிறகு ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்தின் கீழ் சென்று வீழ்ந்தது. பின் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு 1947ல் சுதந்திரத்தை அடைந்து விட்டாலும், பிராமணிய கொடூர வீச்சின் தடயங்கள் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பதை இன்றும் நம்மால் காண முடிகிறது.
தமிழ்நாட்டின் தொன்மையை பறைசாற்றும் சாட்சியங்கள் பல வகைகளிலும் கிடைக்கப்பெறுகிறது. நவீன கால அறிவியல் முன்னேறும்போது அதன் கூடவே பல தரப்பட்ட ஆய்வுகளும் நமக்கு பல தகவல்களை தருகின்றன. தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல் போன்ற ஆய்வுச் சான்றுகளும், தொல் இலக்கியச் சான்றுகளும் நிரம்பக் கிடைக்கின்றன.
புகளூர் கல்வெட்டுக்கள், அசோகனின் கல்வெட்டுக்கள், ஹாத்திக்கும்பா கல்வெட்டுக்கள் போன்ற பல கல்வெட்டுக்கள் மூவேந்தர்களின் ஆட்சியை பற்றி குறிப்பிடுகிறது. தொல்தமிழரின் வாசகங்களுடன் கூடிய சங்ககால நாணயங்கள் பல்வேறு இடங்களில் கிடைக்கப்பெற்றிருக்கிறது. முதுபெரும் நூலான தொல்காப்பியம் தமிழரின் முழு வாழ்வியலை வகுத்து தொகுத்து அளிக்கிறது. இலங்கையின் மகாவம்சம் என்ற நூலும், வெளிநாட்டு அறிஞர்களான பிளாட்டோ, தாலமி, மெகஸ்தனிஸ் போன்றவர்களும் தமிழ்நாட்டு வரலாற்றையும் வணிகத்தையும் குறிப்பிடுகின்றனர்.
ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு ஆவணங்கள் கூட இங்கிருந்த வர்த்தகம், இராணுவம், அரசியல், நீதித்துறை, வருவாய் போன்ற பலவற்றை பற்றி குறிப்பை தாங்கி நிற்கின்றன. எனினும், இத்தனை குறிப்புகளும் தகவல்களும் இருந்தாலும் அவை மொத்தமாக இந்நாட்டு நிலவரங்களை கொண்டிருந்தது என்று சொல்லவியலாது. புறக்கணிக்கப்பட்டோரும், பலவீனமான பிரிவினருக் இருக்கவே செய்தனர். அவர்கள் தம் வாழ்வோ, இலக்கியமோ, சூழியலோ பல இடங்களில் பதிவு செய்யப்படாமலே இருக்கின்றது. அதற்கான காரணங்கள் பல இருக்கின்றது. இந்த கட்டுரை தொடரில் முடிந்தவரை அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி தர முயற்சிக்கிறேன். (தொடரும்....)
#அசகி #தமிழர்வரலாறு
Comments
Post a Comment