கடல்தாண்டிய வணிகம்

கடல்தாண்டிய வணிகம்

வைகை நதி கடலோடு கலக்கும் முகத்துவாரத்தில் இருக்கிறது ‘அழகன்குளம்’ என்ற துறைமுக நகரம். இன்று கோட்டைமேடு என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி செய்த தொல்லியல் ஆய்வாளர்கள், ஓரு உடைந்த பானையை கண்டுபிடித்தனர். அது சுமார் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்று மதிப்பிட்டனர். 16 செண்டிமீட்டர் அகலம் கொண்ட அந்த உடைந்த பானையில் ஒரு கப்பல் வரையப்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் அந்தக் கப்பல் ரோமனியக் கப்பல் என்று உறுதி செய்துள்ளனர். அந்தக் காலக்கட்டத்தில் ரோமனியர்களுடன் கடல் வாணிபம் இருந்தது பல ஆதாரங்களுடன் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கிறது.​

கிரேக்கர்களும், ரோம் நாட்டவரும் அன்று ‘யவனர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். அவர்களை பற்றிய குறிப்பும் தமிழ் இலக்கியத்தில் ஏராளமாய் உள்ளது. புறநானூறு, நெடுநல்வாடை, சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் பல தமிழ்ப்புலவர்களும், பெரிபுளஸ்,  ஸ்டராபோ,  பிளினி,  தாலமி போன்ற கிரேக்கத்தை சேர்ந்த புலவர்களும் இந்த வர்த்தகத்தை பற்றி விரிவாக பதிவு செய்துள்ளனர்.
இதுவரை இத்தகைய இலக்கியச் சான்றுகள் தான் இந்த வணிகத்தை பற்றி பேசி வந்தன. அதற்கான வரலாற்று ஆதாரங்கள் பெரிதாக இல்லாத நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் செங்கடலின் கரையில் அமைந்துள்ள எகிப்து நாட்டின் பண்டைய துறைமுகங்களான க்வெசிர் அல்காதிம், பெரெனிகே ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் ‘க(ண்)ணன், சா(த்)தன், கொ(ற்)றப் பூமான்’ போன்ற தமிழ்ப் பெயர்கள் எழுதப்பட்டிருக்கின்றன.









இது எல்லாவற்றிற்கும் மேலாக ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஒரு கையெழுத்துப் பிரதி இருக்கின்றது. அது ரோமானிய வாணிபனுக்கும், தமிழகத்து வாணிபனுக்கும் இடையே நடைபெற்ற வணிக ஒப்பந்தம் அது. முக்கியமாக அது ‘பாப்பிரைஸ்’ தாளில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தியாவன் மிகப் பழமையான வணிக ஒப்பந்தம் இது தான்.

முசிறி’ துறைமுகத்திலிருந்து பொருளேற்றி நைல் நதியின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள ‘அலெக்ஸாண்டிரியா’ நகரை சென்றடைவது தொடர்பாக அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் ‘கிரேக்க’ மொழியில் எழுதப்பட்டுள்ளது. எனில் கிரேக்கம் அறிந்தவர்கள் நம் நாட்டில் அதிகம் இருந்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது. அதற்கான சங்க இலக்கியச் சான்றுகளும் நிறைய இருக்கின்றன. பெருங்கதையின் நாயகன் உதயணனும், அவனது மனைவி மான்னீகையும் கிரேக்க மொழி அறிந்தவர்களாக சொல்லப்படுகின்றனர்.


அரபிக் கடலில் அடிக்கும் பருவக்காற்றை பயன்படுத்தி கப்பல் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். கடலில் வீசும் 16 வகை காற்றையும், கடலின் நீரோட்டங்களையும் அறிந்திருந்த ஞானமே இந்த பயணங்களுக்கு உதவியிருக்கிறது என்பது தெளிவாகிறது. கி.பி. முதல் நூற்றாண்டில் ‘ஹிப்பாலஸ்’ எனும் கிரேக்க மாலுமி கடல் காற்றின் உதவியால் அரபிக் கடலின் வழியே தமிழகம் வந்தடைந்தான் என்ற குறிப்பிருக்கிறது. மேலும் முசிறியில் இருந்து கிளம்பும் கப்பல்கள் பருவக் காற்றை பயன்படுத்தி 40 நாட்களில் செங்கடல் துறைமுகத்தை சென்று அடைந்திருக்கின்றன.


சிலப்பதிகாரத்தில் சாதுவன் என்ற வணிகனை பற்றிய குறிப்பு ஒன்று இருக்கிறது. அவன் பூம்புகார் துறைமுகத்தில் இருந்து ‘சாவக்’ தீவிற்கு வணிகம் செய்யக் கிளம்புவதாக குறிப்பிடப்படுகிறது. இப்படி சங்க இலக்கியம் தொடங்கி பல இடங்களிலும் இலக்கியக் குறிப்புகள் ஏராளமாய் காணப்படுகின்றன.

நைல் நதிக்கரையில் உருவான எகிப்திய நாகரிகமும், யூப்ரெடீஸ்டைக்ரஸ் நதிக்கரையில் உருவான சுமேரிய நாகரிகமும், சிந்து சமவெளியில் உருவான சிந்து சமவெளி நாகரிகமும் தங்களுக்குள் நிகழ்த்திக்கொண்ட வணிகத்தொடர்பு குறித்த ஆதாரங்களை அங்கு நடைபெறும் அகழாய்வுகள் அளித்து வருகின்றன. முன்னமே சொன்னது போல் சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் உள்ள கப்பல், எகிப்து கப்பல்களின் வடிவத்தில் உள்ளதாக ஆய்வாளர்கள் சொல்கின்றனர். அதேபோல சுமேரிய நாகரிகத்தில் ‘ஃபாரா’ (ஈராக்) என்ற இடத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த முத்திரையில் உள்ள கப்பல் சிந்துசமவெளியில் இருந்த கப்பல்களை ஒத்திருந்ததாக கூறுகின்றனர்.

கிடைத்திருக்கும் பல இலக்கிய ஆதாரங்களை தவிர்த்து விட்டு பார்த்தால்கூட
- அழகன்குளத்து பானை கோட்டோவியமும்
- எகிப்து நாட்டில் கிடைத்த பானையில் இருக்கும் பெயர்களும்
- பழமையான வணிக ஒப்பந்தமும்
தமிழகத்திலிருந்து பல நாட்டிற்கு இடையே நிகழ்ந்த வணிக தொடர்பை உறுதிப்படுத்துகிறது.
#அசகி
#வைகைநதிநாகரிகம்

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

தொன்மதுரை!