தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (2)
தமிழர் வரலாறு - தொடர்கட்டுரை (2)
தொல்பழங்காலத்தலிருந்தே திராவிட இன மக்கள் அல்லது தமிழ்ப்பூர்வக்குடிகள் இந்தியா முழுமையும் பரவியிருந்தனர் என்பதை மறுதலிக்க முடியாது. சிந்துப்பகுதிகளில், மஹாராஷ்டிரத்தில், இலங்கையில், இன்ன பிற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் திராவிட குடியேற்றங்களுக்கான சான்றுகளை வெளிக்கொணர்ந்ததோடு, அதன் தொன்மையை, வளமையை உறுதிப்படுத்தியுள்ளன. பீஹார், வங்காளம், ஒரிஸா போன்ற இடங்களில் இன்றும் குய், குருக் போன்ற 14 தமிழின் கிளை மொழிகள் (திராவிட மொழிக்குடும்பம்) இன்றும் உயிர்த்திருப்பது தமிழர்கள் நாடெங்கிலும் வாழ்ந்திருக்கிறார்கள் என்று நிறுவுகிறது. ஆரியர்களின் வருகையும் எழுச்சியும், அதனோடு ஒட்டி இங்கிருந்த பூர்வக்குடிகளின் வீழ்ச்சியும் தோல்வியும், அவர்களை தென்கோடி எல்லைக்கு தள்ளிவிட்டது எனலாம்.
ஹீராஸ் பாதிரியாரின் கூற்றுபடி ஹரப்பாவின் முத்திரைகளில் காணப்படும் மொழி திராவிட மொழிக்குடும்பத்தின் பெற்றோராகும். அந்த வகையில் திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழியான தமிழே ஹரப்பாவின் முத்திரைகளில் காணப்படுவது என்று கொள்ள வேண்டும். பலுசிஸ்தானத்தில் காணப்படும் பிராஹூய் என்ற பழங்குடியினரின் மொழி திராவிட மொழிகளை ஒத்திருக்கிறது. அங்கு சிந்துசமவெளிப் பள்ளத்தாக்கிலிருந்து கிளம்பியவர்களின் குடியிருப்பு இருந்ததற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. மேலும் ஆதிச்சநல்லூரிலும், கொடுமணலிலும், மாங்காட்டிலும் நடந்த அகழ்வாய்வுகள் கி.மு. 1000 வாக்கில் ஒரு நாகரிகம் இருந்து வந்ததற்கான சான்றினை நமக்கு தருகிறது. எலும்புகள் மற்றும் கல் இரும்பு முதலிய உலோகங்களாலான பாத்திரங்களும் ஆயுதங்களும் ஆபரணங்களும் கூட கிடைத்திருக்கின்றன.
இந்தியாவை வெற்றி கொண்டு காலனித்துவப்படுத்துவதற்கான ஆரியர் வருகை தான் தமிழருக்கு (திராவிடருக்கு) முதல் சவால். கி.மு. 2500 முதல் 2000 வரை குடியேற்றத்தின் அடுத்தடுத்த அலைகளாக ஆரியப் பழங்குடிகள் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவை வந்தடைந்தனர். அன்றிருந்த கங்கை சமவெளிப்பகுதியை தம் வசப்படுத்தி ‘ஆரியவர்த்தம்’ என்றழைத்து ‘கோசலம்’ மற்றும் ‘மகதம்’ போன்ற எண்ணற்ற அரசுகளை நிறுவினர்.
ஐரோப்பியர்கள் அமெரிக்க இந்தியர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்தது போலவே, இந்திய ஆரியரும் இங்கிருந்த திராவிடரை (தமிழரை) அரக்கர்களாகவும் குரங்குகளாகவும் சித்தரித்தனர். அவர்கள் பூர்வக்குடிகளை விந்திய மலைகளுக்கு அப்பால் துரத்தினர். வளமான பகுதிகளை கைக்கொண்ட ஆரியர் விந்திய மலைகளை ஆரிய திராவிட எல்லையாகக் கருதினர். ஆரியத்தின் எழுத்தாளரான ‘மனு’ விந்திய மலையை ஆரியத்தின் தெற்கு எல்லையாக கருதினார்.
என்றாலும் நூற்றாண்டுகள் கடக்க கடக்க, கி.மு. முதல் நூற்றாண்டுவாக்கில் ஆரியப்பழங்குடிகள் இன்னும் தெற்கு நோக்கி நகரத் துவங்கினர். வெற்றி, காலனித்துவம் மற்றும் மதமாற்றம் என்ற மூன்று முனைத்தாக்குதலோடு முன்னேறினர். ‘ஶ்ரீராமன்’ வெற்றியின் அடையாளம், ‘பரசுராமன்’ காலனித்துவத்தின் அடையாளம், ‘அகஸ்தியர்’ மதமாற்றத்திற்கான அடையாளம். எது உண்மை எது கற்பனை என்று பிரித்தறியாத வண்ணம் ஆரிய பண்பாடு ஒன்றறக் கலந்திருக்கிறது.
இராமாயணம் தெற்கின் மீதான படையெடுப்பு போல தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பரசுராமன் உள்ளூர் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் மேற்குப்பகுதியில் பிராமணர்களை குடியமர்த்தினான். கேரளம் என்று பெயர் பெற்று நிற்கிறது அந்நிலம். (திராவிட மொழிகளில் மலையாளம் தமிழோடு இணையாக சமஸ்கிருதம் கலந்த மொழி). அகஸ்தியர் பல முனிவர்களுடன் வந்து இங்கு ஆரியப் பண்பாட்டை நிறுவுகிறார். இதன் பின் தான் திராவிடர் (தமிழர்) ஆரிய மதத்திற்கு மதமாற்றம் செய்யப்படுகின்றனர்.
இவர்களை தொடர்ந்து அப்படியே பிற இனக்குழுக்களும் தெற்கில் நுழைந்தனர். மடங்களையும் வழிபாட்டு தலங்களையும் நிறுவி தம் மதங்களை பரப்பினர். பௌத்தர்களும், சமணர்களும் முக்கியமானவர்கள்.
பின்னாளில் மேற்கு ஆசியாவை ரோமானியர் வெற்றி கொள்ள அங்கிருந்து தப்பி வந்து சிரியர்களும், யூதர்களும் மேற்குக் கடற்கரையில் பெரும்பான்மையாக குடியமர்ந்தனர். வணிகத்தின் மூலம் அரேபியர் இந்நாட்டிற்குள் நுழைந்தனர். அவர்களுடன் இஸ்லாமும் வந்து சேர்ந்தது. இப்படி தான் பல்வேறு கூட்டுமதங்கள் வந்து சேர்ந்து இங்கிருந்த தொன்மைகளின் அழிவுக்கு இட்டுச் சென்றது.
#அசகி #தமிழர்வரலாறு
Comments
Post a Comment