மலர்தான் நான்!

மலர்தான் நான்!

இன்னும் எத்தனை நேரம்?!
இப்படியே அசைவற்று இருப்பது!

இன்னும் எத்தனை நேரம்?!
இமைநிறைய வேடிக்கை மட்டுமே காண்பது!

இன்னும் எத்தனை நேரம்?!
கரையின்மேல் அமர்ந்து கொண்டே
கடலோடு உரையாடுவது!!

நான் அசையாமல் இருக்க
இருகைகள் அழுத்திப் பிடிக்கின்றன!

காற்றோடு பறக்கலாம் என்றால்
கயிறு கொண்டு கட்டிவிட்டார்கள்!

ஏன்?!
என்னை மட்டும் ஏன்!
இத்தனை பேர் சுற்றியிருக்க
என்மேல் மட்டும் ஏன் இத்தனை கரிசனம்?!

விளையாடுவதில் கிடைக்கும்
விடலைகளின் இன்பம் யார் அறிவார்?!

சரி!
எனக்காய் இத்தனை பிரயத்தனப்படும்
இவர்களுக்கென,
இரண்டு நிமிடம் துறவியாகிறேன்!
ஆசைகளை துறக்கிறேன்!!

அட!
நான் மனதில் நினைத்ததை
இவர்கள் செவிக்கு
தூது சொன்னவன் யார்?!!
துறவி என்றவுடன்
தூக்கி பூஜையில் அமர்த்துகிறார்கள்!!

"கவனிப்புகள்" கூடுகின்றன!
ஊதுவர்த்தி தொடங்கி
ஆர்த்திவரை
அத்தனையும் செய்தாகிவிட்டது!!
சாதமும் பரிமாறுகிறார்கள்?!
பூஜைக்கு பின் பிரசாதமோ!

ஆஹா!
ஆவலாய்! ஆர்வமாய்!! ஆசையாய்!!!
நான் எதிர்பார்த்த நொடி
வந்தேவிட்டது!!

கடலுடன் என்னை கலந்துவிட்டார்கள்!
நானும் கரைந்தே போகிறேன்!!

கடல் என்னை
தூக்கிக் கொஞ்சுகிறது!
மகிழ்ச்சியில் மூழ்கடிக்கிறது!
மரகதமாய் ஜொலிக்கிறது!!

நானும்
அலைகளில் ஏறியிறங்கி
தத்தி தத்தி
நடைபயில்கிறேன்!!

கடல் என்னை
கலைத்து போட்டது!
களைத்து போகிறேன்!!

மனம் நிறைய
மூச்சு இறைய
மூழ்கிய களிப்பில்
மெல்ல கரை சேர்கிறேன்!!

அங்கே!
என்னைப் போலவே
காண்பார் இன்றி
கவனிப்பார் இன்றி
சில மலர் மாலைகள்!!

மலர்தான் நான்!
ஆனால்
இடமும் தேவையும் தீர்மானிக்கின்றன!
இறுதியாய் சேரும் இடத்தை!!

எத்தனை பேரோ இன்னும்
என்னைப் போலவே
"திவசத்தில்" மாலையாய்!!

        -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!