ஆரியம் திராவிடம்!

1971 முதல் சிந்து சமவெளிக் கலாச்சாரத்தை மொழி கோணத்தில் ஆராய்ந்து வருபவர் மொழியியலாளர் அஸ்கோ பர்ப்பொலா (Asko Parpola). அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும் கீழ் காண்க. (ஆரியம் திராவிடம் குறித்ததொரு பதில்)

கேள்வி: ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்றும் சிந்துசமவெளி நாகரிகம் வேதகாலத்தையும் வேதங்களையும் சார்ந்ததென்றும் சில இந்திய ஆய்வாளர்கள் கூறிவருகின்றார்களே.. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: நகர்ப்புறக் கூறுகள்கொண்ட சிந்துசமவெளி நாகரிகம், வேதங்களில் காணப்படும் குடிபெயர் கலாச்சாரத்திலிருந்து வெகுவாக வேறுபட்டது. எடுத்துக்காட்டாக, வேதங்களில் விவரிக்கப்படும் சடங்குகளில் குதிரைக்கு ஒரு முக்கியப்பங்கு உண்டு. சிந்து சமவெளியில் குதிரை இருந்திருக்கவில்லை. எழுத்து முத்திரைகளில் விலங்குகளின் உருவம் வரிக்கோட்டு உருவம் காணப்பட்டாலும், குதிரை அவைகளில் பிரதிநிதித்துவப் படுத்தப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் கி.மு.2000த்திற்கு முற்பட்ட குதிரை எலும்பு தொல்லெச்சம் எதுவும் தென்னாசியாவில் கண்டறியப்படவில்லை. குதிரை தென்னாசியாவை சேர்ந்த விலங்கல்ல. சிந்த்ய் சமவெளி நாகரிக காலத்திற்கு பின்புதான் அது இந்தப் பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றது.

ஆரிய - திராவிட இருமையைப் பற்று பேசும்போது ஒன்றை நாம் மனத்தில் கொள்ளவேண்டும். ஆரியம் திராவிடம் என்பது மொழியியல் கூறுகளேயன்றி இனக்கூறுகள் அல்ல. இம்மாதிரியான தனித்துவ இனங்களே கிடையாது. திராவிட, ஆரிய மொழிபேசுவோர், ஆரம்ப முதலே, தென்னாசியாவின் ஒருவருக்கொருவருடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்கள், உள்ளூர் மக்களுடன் கலந்திருப்பார்கள். பல நூற்றாண்டுகளாக இயங்கிய இரு மொழிகளும் ஒன்றையொன்று பாதித்திருக்க வேண்டும். பின்னர் ஏறக்குறைய வட இந்திய மக்கள் யாவரும் முழுவதுமாக இந்தோ-ஐரோப்பிய மொழி பேசினார்கள்.

(இதற்கு மேல் அவர் சொல்லும் சொற்கள்தான் முக்கியமானவை..) ஒன்றை இங்கு நான் சொல்லியாக வேண்டும். பழங்கால வரலாறு அரசியலாக்கப்படுவதும் கல்விப்புலம் சாராத நோக்கங்களுக்காக அது பயன்படுத்தப்படுவதும் நமது துரதிர்ஷ்டம் என்றே நான் நினைக்கின்றேன். மதவாதிகளும், மொழிவெறியர்களும் ஒரு தவறான தேசியத்தை உருவாக்கிவிடுகிறார்கள். இதனால் தென்னாசியாவில் மட்டுமல்ல, மற்ற பகுதிகளிலும் கேடுகள் விளந்திருக்கின்றன. மொழி மரபு, அதன் பாரம்பரியம் இவை மக்களைப் பிரிக்கும் சக்தியாக மாறிவிடக்கூடாது.


நூல்: கல் மேல் நடந்த காலம்
ஆசிரியர்: சு.தியோடர் பாஸ்கரன்

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!