மௌனமாய் எழுப்பிய புரட்சி! மௌனத்தால் எழுதிய புரட்சி!!
தைத்திங்கள் அதன் விடியலில், அமைதியாய் ஒரு யுக மாற்றத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தது. இது பற்றி நம்மூர் அரசியல் ஆன்றோர்கள் அறிந்திருக்க நியாயமில்லை! அவர்கள் தத்தமது கனவுகளில் "முதல்வர்" பட்டத்தை தம் பெயர்ப்பலகையில் கருத்தாய் பொறித்துக்கொண்டிருந்தனர்!
'எமக்கு தொழில் கலாய்த்தல், மீம்ஸ் போடுதல்' என்றே இயங்கிக்கொண்டிருக்கிறது இளைஞ உலகம், என்ற விமர்சனத்தை இளையதலைமுறை தொடர்ந்து எதிர்கொண்டு வந்தது!
ஆனால் இன்று!
"வெட்டி வீழ்த்தும் அளவு கூர்மையானது
எங்கள் பார்வை!
மொத்த உலகமும் திரும்பி பார்க்கும் அளவு
சத்தமானது எங்கள் மௌனம்!
கரைதாண்டும் கடலை, கட்டிப்போடும் வலிமைமிக்கது
இணைந்த எம் கைகள்!"
என்று சொல்லாமல் சொல்கிறது இந்த இளைஞர் பெருந்திரள்!!
கலாய்ப்பில்
உள்ள கோபத்தையும், மீம்ஸ்-ல் உள்ள ஆழ்ந்த அரசியல் பார்வையும் உணரும்
அளவுக்கு, பலரின் மனக்கண்கள் நல்ல நிலையில் இல்லை என்பது மட்டும் 'உள்ளங்கை நெல்லிக்கனி'.
"மச்சி! வெளிய போலாமா?!"- ஒரு இளைஞனிடம் நீங்கள் கேட்கும் இந்த ஒற்றை கேள்விக்கு ஓராயிரம் வகையில் பதில் இருக்கும்!
"பக்கத்துல டீக்கடை போலாம்டா!"
"தலைவன் படம் ரிலீஸ் ஆகிருக்கு! கட்-அவுட் கட்டனும், தியேட்டர் போலாம்டா!"
"பீச்சுக்கு போலாம்டா!"
"பைக்குல டேங்க் ஃபுல்! சும்மா ஊர் சுத்தலாம்டா!"
"சாரி மச்சி! இன்னைக்கு என் ஆள்கூட வெளியபோறேன்!"
இப்படி இன்னும் பல பதில்கள் இருக்கும் "வேலைவெட்டி இல்லாதவர்கள்"
என்ற பெருமையான பட்டத்தை தாங்கி நிற்கும் இந்த ஆத்மாக்களிடம்! ஆனால் இன்று
அதே "வேலைவெட்டி இல்லாதவர்கள்" தான் இந்திய அரசுக்கும், தமிழ்நாட்டு
அரசுக்கும், ஒட்டுமொத்த ஊடகத்துக்கும் வேலை கொடுத்திருக்கிறார்கள்!
அவர்கள் தாங்கள் செல்லும் இடங்களை மாற்றி கொள்ளவில்லை! அதே இடத்தில் நின்றுகொண்டு, தத்தமது எண்ணங்களை மட்டும் மாற்றிக்கொண்டார்கள்!
டீக்கடையை யுத்தி தீட்டும் களமாய் மாற்றினார்கள்!
கடற்கரையை யுத்த களமாய் மாற்றினார்கள்!!
எரிபொருள் நிறைத்த வாகனம் கொண்டு, ஊர் எங்கும் புரட்சித்தீ பற்ற வைத்தார்கள்!!
கட்-அவுட் தான் ஏந்தி நின்றார்கள், ஆனால் அதில் தலைவனாய் "காங்கேயம் காளை" கம்பீரமாய் நின்றிருக்கிறது!
எப்படி
சாத்தியமானது இது?! நொடிப்பொழுதில் நிகழ்ந்துவிடவில்லை இத்தனையும்!
உன்னிப்பாக, மிக உன்னிப்பாக அரசியலை அணுகுகிறார்கள், ஆராய்கிறார்கள் இன்றைய
இளைஞர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று! ஒவ்வொரு பொங்கலுக்கும்
கத்திவிட்டு கலைந்து போய்விடுவார்கள்! ஒருநாள், பொங்கல் பண்டிகையயே
போகியில் போட்டு எரித்துவிடலாம் என்று கனவு கொண்டிருந்த கூட்டத்தின்
கன்னத்தில் அறைவிட்டு எழுப்பியதுபோல் இருக்கிறது இந்த எழுச்சி!!
இந்த கூட்டத்தில்தான் எத்தனை ஒழுக்கம்! எத்தனை முழக்கம்! எத்தனை எத்தனை முன்மாதிரி நிகழ்வுகள்!!
1. சமூகவலைதளங்களை
உச்சபட்சமாக எவ்வளவு நல்ல முறையில் உபயோகப்படுத்த முடியும் என்பதை
செயல்வடிவத்தில் காட்டிவிட்டார்கள் நம் இளைஞர்படை! மொத்த நிகழ்வையும்
சமூகவலைதளத்தின் மூலமாகவே கட்டமைத்தனர்! எந்த முடிவையும், எந்த தகவலையும்
ஒற்றை விநாடியில் தமக்குள் பரிமாறிக்கொண்டனர்.
2.
யாரை நம்பியும் நாங்கள் இல்லை, எவர் தயவும் எமக்கு தேவையில்லை, எவர்
ஆதரவையும் ஏற்கபோவதும் இல்லை என்பதில் இறுதிவரை உறுதியாய் இருந்தனர்.
3.
உலகம் போற்றும் ஆளுமை யாரும் இல்லை, தமக்குள்ளே கூட தலைமை என்று யாரையும்
வகுத்துக்கொள்ளவில்லை. ஆனாலும் இவ்வளவு பெரிய கூட்டம் கூடுகிறது, இதற்கு
ஒருங்கிணைப்பாளர் தான் இல்லையே தவிர ஒருங்கிணைக்கும் சக்தி இல்லாமல் இல்லை! 'தமிழன்' என்ற ஒற்றைசொல் அனைவரையும் தட்டி எழுப்பி இழுத்து வந்தது!!
4. யார் தேவை,யார் தேவையில்லை!எவரை
தம்முடன் இணைத்துக்கொள்வது, யாரை தவிர்ப்பது! - போன்ற பல முக்கிய
முடிவுகளில் ஒத்த கருத்தோடு இருந்தனர். அந்த முடிவுகள் எல்லாம் கூட்டம்
கூட்டி எடுக்கப்படுவில்லை, இதைத்தான் செய்யவேண்டும் என்று எவரும்
சொன்னதாய், கேள்வி இல்லை!!
5. திட்டமிடுதல்
இல்லா போராட்டம் தான்! ஆனால் அதிலும் தான் எத்தனை நேர்த்தி!! அத்தியாவசிய
தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யப்படுகின்றன! ஒருவருக்கொருவர் தம்மால் இயன்ற
உதவிகளை செய்து கொள்கின்றனர்! இதில் பல குடும்பங்கள், தனியார் மற்றும்
தொண்டு நிறுவனங்களின் பெரும் பங்கை குறிப்பிடாமல் இருக்க முடியாது!
6. இத்தகைய ஒரு பெரும் போராட்டம், இலட்சோபலட்சம் பேர் பங்கு கொண்ட போராட்டம், எந்த சிறு அசம்பாவிதம் கூட இல்லாமல், முற்றிலும் அகிம்சைவழியில்
நடத்திக் காட்டியிருக்கிறார்கள். உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு
ஒரு மகத்தான போராட்டம்! ஒட்டுமொத்த உலகத்திற்கும் இது ஒரு சிறந்த
வழிகாட்டுதல்!
மௌனமாய் எழுப்பிய புரட்சி!
மௌனத்தால் எழுதிய புரட்சி!!
எத்தனை எத்தனை கோடி பேரின்
தூக்கம் தொலைத்து
எழுப்பிய கனவு!!
வீடு வாசல் ஆயிரம் இருந்தும்
வீதியில் விழுந்தே
விரிந்த கனவு!!
அத்தனை கனவும்
எஞ்சுது இங்கு கனவாவே!
அஞ்சுதல் இனிவேண்டா என்று -
துஞ்சியே கிடந்த
இளஞ்சிங்கக் கூட்டம்
திமிறி எழுந்தது பாரடா!!
பஞ்சை பற்ற வைக்கும் தீப்பொறி
கண்ணில் கிடக்குது பாரு!
நெஞ்சில் தேக்கி வைத்தது எல்லாம்
மண்ணில் நடக்குது பாரு!
இளைஞப் பெருங்கூட்டமே!
மண்ணால் எழுப்பிய கோட்டைகள் எல்லாம்
அலைகள் வந்தே அரித்து போகும்! - இனி
உன்னால் எழும்பும் கோட்டைகள் கண்டு
அலைகள் கூட அடங்கிப் போகும்!!
-அ.ச.கி.
இனி வரும் காலத்தில் தேவை ஏற்படும்போதெல்லாம், இத்தகைய எழுச்சிகளும், புரட்சிகளும் வரும் என்ற எதிர்பார்ப்போடு!!
Comments
Post a Comment