எழுந்திடமாட்டாயோ?!!

எழுந்திடமாட்டாயோ?!!

கண்டோர் எல்லாம்
கைகூப்பிய முகம் ஒண்ணு!
குரலே ஒசத்தாத
குழந்தை முகம் ஒண்ணு!
வழிந்தோடும் அன்புகொண்ட
வாஞ்சை முகம் ஒண்ணு!
வெளியுலகம் காணாம
வாழ்ந்த முகம் ஒண்ணு!
வெள்ளந்தியாய் வாழ்ந்த
வெள்ளை முகம் ஒண்ணு!!
ஐவ்வகை முகமும் இன்று
ஐஸ்பெட்டியில் வச்சு - இன்னும்
வெளுக்குதம்மா!!!

கலையாத தலமுடிய
கணம் ஒரு தடவ சீவி!
நிதம் ஒரு தடவ நீவி!
நின் முடி
தன் நிறம் இழந்ததம்மா!!

காப்பித் தண்ணியக்கூட
ஆத்திக்குடிச்சிடுவ!!
காலம்
ஆத்தாத மனக்குறைய
ஆத்தா - நீ சுமந்த!!!
சுமையும் தாங்காமதான்
சுகம் தொலைச்சயம்மா!!

காய்ச்சல் வந்தாக்கூட
கவனம் நிறைச்சுடுவ!
சுகவீனம் சிறிதானாலும் - உன்னயே
சுருக்கித்தான் சரி செஞ்சிடுவ!!

உன் உடல் ஏற்கும்
பதம் அறிஞ்சு
பதனமா எட்டு வெப்ப!
எட்டு திசை சுத்தி பாக்கவா
எட்டாத இந்த முடிவு எடுத்த!!!

உன்
வழி நடந்தே
வாழ்க்கை நடத்திய கூட்டம்
வந்திருக்கு!
எழுந்திடமாட்டயோ?!!

பொங்குபாளையத்துல
பொங்கு பொசுக்குனு
போயிட்ட! - உன்னால
பொறப்பு எடுத்து - நீ
பொத்தி வளர்த்த
பேரன் வந்திருக்கேன்!
எழுந்திடமாட்டாயோ?!!

நெருப்பு கங்கு பட்டாலும்
பொசுக்குனு பயந்துடவ!
பொங்கும் நெருப்பிலிட்டு - உன்ன
பொசுக்க போறாங்களே!
எழுந்திடமாட்டயோ?!!
              -அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!