உதகை!

உதகை!
மலைமீது படுத்துறங்கும் மேகம்!
பச்சை படிக்கட்டோ
எனத் தோன்றும் தேயிலை அடுக்குகள்!
இறங்கிவந்து வருடிப் போகும்
மேக மெத்தைகள்!
நீரில் விழுந்து ஓடிவந்து
முகம் மோதும் வாடைக்காற்று!
மேற்தோலின் துளை வழியே
ஊசி ஏற்றும் குளிர்!
பனியோ இல்லை
பால் வண்ண துணியோ
என்று திகைக்கும் அளவு மூட்டம்!
மூச்சுக்காற்றுக்கும் வண்ணம் ஏற்றிக்கொண்டிருக்கும்
மண்ணக தொழிற்சாலை!
குயில் கூவாத காலைகளையும்
அழகாய் காட்டிக்கொண்டிருக்கும்
விண்ணகம் பொழிற்காலை!
இடம் பெயரத் தோன்றாத
எண்ணம் குளிர்சோலை!
சுடும் நிலவொன்றும் தந்திருக்கக்கூடாதா
என்று அலற்றிட வைத்திடும்
வைகறைப் பொழுதுகள்!

இத்தனையும் தன்னுள்
பூட்டி வைத்திருக்கிறது
ஊட்டி!
இத்தனை இத்தனை இருந்தும்
இங்கு வந்த கண்ட பின்னும்
இறந்து போக தோன்றுகிறதாமே சிலருக்கு?!

#அசகி

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

தொன்மதுரை!