தொன்மதுரை!

தொன்மதுரை!

மதுரை என்று சங்க இலக்கியங்கள் சொல்வதெல்லாம் இன்றைய மதுரையை அல்ல என்றொரு கருத்துண்டு. அந்த கருத்தை மெய்பிக்க அல்லது பலம் சேர்க்க சங்க இலக்கியங்களில் இருந்தே பல சான்றுகளும் முன் வைக்கப்படுகின்றது. அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது அன்றைய தலைநகரான மதுரையின் இடமமைப்பு. சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் அன்றைய மதுரை என்பது திருப்பரங்குன்றத்திற்கு நேர் கிழக்காக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று இருக்கும் மதுரை, திருப்பரங்குன்றத்திலிருந்து தென்கிழக்காக இருக்கிறது. மதுரையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கீழடியும் அங்கிருந்து வெளிவரும் அதிசயங்களும் அந்தக் கருத்துக்கு வலுசேர்க்கிறது.

கீழடி அகழ்வாய்வு செய்யப்படும் இடம் மணலூர் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும் (பாண்டியர்களின் பழைய தலைநகர் என்று குறிப்பிடப்படுகிறது). அகழ்வாய்வு மேற்கொள்ளப்படும் அந்தத் தென்னந்தோப்பு மணலூரின் கண்மாய்க்கரைமேட்டில் தான் அமைந்திருக்கிறது.
முதல் தமிழ்ச்சங்கம் இருந்த மதுரையும் கபாடபுரமும் கடல்கொண்டுபோக பின் உருவானது தான் இன்றைய மதுரை என்று ‘இறையனார் அகப்பொருள் உரை’ என்ற நூல் சொல்கின்றது.
கண்ணகி எரித்த மதுரையை பற்றி சிலப்பதிகாரம் பேசுகின்றது. திருவிளையாடற்புராணமோ, மணலூரை தலைமையிடமாகக் கொண்டு ‘குலசேகரப் பாண்டியன்’ ஆட்சி புரிந்ததாக கூறுகின்றது. அந்த குலசேகரப் பாண்டியன் தான், அன்றிருந்த ‘கடம்பவனத்தை’ அழித்து இப்போதுள்ள மதுரையை நிர்மாணித்தான் என்று கூறுகிறது.

இதுவரை நம் இலக்கியங்கள் மதுரையை புகழ்வதை பார்த்தோம். ஆனால் அதே நேரத்தில் பிறமொழி இலக்கியங்களும் மதுரையை பற்றிய குறிப்புகளை தாங்கி நிற்கிறது என்பதை குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். விந்திய மலைக்கு தெற்கே ஒரு புகழ்மிக்க நகராக மதுரை இருந்ததை வால்மீகி எழுதுகிறார். திரௌபதியின் சுயவரத்தில் ஒரு பாண்டிய மன்னன் கலந்து கொண்டதாக வியாசன் எழுதுகிறார். வாத்ஸயனாரும், கௌடில்யரும், காளிதாசனும் மதுரையை பற்றி புகழ்ந்து எழுதுகின்றனர்.

வரலாற்றின் நீட்சி


பாண்டிய மன்னனுக்கு உரியது வேப்பம்பூ என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்வந்த சங்க இலக்கியங்கள் கூறுகின்றன். இன்றும் மதுரையின் அரசி மீனாட்சிக்கு திருநாளன்று ‘வேப்பம்பூ’ மாலை தான் சூட்டப்படுகிறது.

மேற்சொன்ன வாக்கியம் இன்னும் இரண்டு செய்திகளை தாங்கி நிற்கிறது. ‘மீன் + ஆட்சி’ என்பது மீன் ஆட்சி புரிந்ததை தாங்கி வருகிறது. மீன் என்பது பாண்டியரின் சின்னம் என்பதை நினைவில் கொள்க!
அடுத்ததாய் மதுரையின் தலைவியாக ‘மீனாட்சி’ தான் இருக்கிறாளே ஒழிய, சொக்கநாதன் இல்லை. உலகெங்கும் ஆதி நாகரிகத்தில் பெண்ணே தலைவியாய் தலைமையேற்று நிற்கிறாள் என்பதும் உறுதிசெய்யப்படுகிறது. பழமை மாறாது புதுமையோடு இயைந்து நிற்கும் தொல்நகரம் மதுரை என்பதும் திண்ணம்.

#அசகி

Comments

  1. Play Blackjack Online - Lucky Club
    Play blackjack online with a trusted online blackjack site that is luckyclub trusted and certified to work with our players. Get instant bonuses and free  Rating: 5 · ‎1 vote

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!