இதையும் உள்ளடக்கியது தான் மஹாபாரதம்!
இதையும் உள்ளடக்கியது தான் மஹாபாரதம்!
பாரதம் தெய்வ வரலாறாக சொல்லப்படுகிறது! அதில் எனக்கு தோன்றிய சில முரண் இடங்கள்.
- பாரதத்தில் மிசச் சிறந்த வில்லாளன் யார் தெரியுமா? கர்ணன்? அர்ச்சுனன்? துரோணர்? பீஷ்மர்? நிச்சயம் இவர் எவரும் இல்லை. ஏகலைவன் தான் மிகச் சிறந்த வில்லாளனாக கருதப்பட வேண்டியவன். அவ்வகையில் உருவாக்கப் பட்டிருக்க வேண்டியவன். ஆனால் என்ன நிகழ்ந்தது அவனுக்கு? வேடுவன் என்ற ஒற்றை காரணத்தால் கட்டை விரலை தட்சணையாக பெற்று அவன் கலைக்கும் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் துரோணர். இவர் தான் சிறந்த குரு என்று பாரதத்தில் கொண்டாடப்படுகின்றார். நீதி தவறிய இவர் எப்படி நல்ல குருவாக சீடர்களுக்கு நன்னெறி புகட்ட முடியும்?
- பாண்டவர்கள் தம் தாயுடன் ஓய்வெடுப்பதற்காக அரக்கு மாளிகைக்கு செல்கின்றனர். அரக்கு மாளிகைக்கு தீ வைத்து பாண்டவர்களை குடும்பத்தோடு எரிக்க திட்டமிடுகிறார்கள் சகுனியும், துரியோதனனும். ஆனால் அங்கிருக்கும் சூழ்ச்சி குறித்து அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றது. பாண்டவர்களும் தப்பித்துவிடுகின்றனர். ஆனால் அங்கு தான் கேள்வி. பாண்டவர்கள் வெறுமனே தப்பித்து போகமாட்டார்கள். அங்கு பணிபுரியும் ஒரு விதவைத் தாயையும் அவளின் ஐந்து மகன்களையும் அரக்கு மாளிகை எரியும்போது அதனுள் விட்டுவிட்டு, பாண்டவர் தான் இறந்தனர் என்றோர் தோற்றத்தை உருவாக்கி விட்டு தப்பிச் செல்கின்றனர். அவர்களுக்கு கீழ் பணிபுரிகின்றனர் என்பதற்காகவும், கீழோர் என்று அடக்கிவைத்தும் அவர்களின் உயிரை போக்கிய அவர்கள் எப்படி தர்ம சீலர்கள் ஆவர்?!
- பாஞ்சாலியின் சுயம்வரத்தின் போது கர்ணன் சத்ரியன் அல்லன் எனக் கூறி அவமதித்து போட்டியில் கலந்து கொள்ள விடாமல் செய்வார் ‘மாயக் கிருஷ்ணன்’. ஆனால் அர்ச்சுனன் ‘பிராமணனாய்’ சென்று தான் கலந்து கொள்வான். அதை எதிர்த்து கேள்வி கேட்போரை பாண்டவர்கள் துவம்சம் செய்து பாஞ்சாலியை கூட்டிச்செல்வர். சத்ரிய தர்மம்!
- பகடை ஆடுவதும், அதன் தொடர்ச்சியாய் பாஞ்சாலி துகிலுரியப்படுவதும் உச்சம். தர்ம சீலர், தர்மத்தின் அதிபதி தர்மர் மிக அருமையாய் தர்மம் கடைபிடிப்பார். எவர் அனுமதியும் பெறாமல் பணயம் வைத்து ஆடுவார். மஹாபாரதத்தில் தெய்வப் புதல்வனாய் விளங்கும் பீஷ்மர் தர்மத்தை ‘நிலைநாட்டுவார்’! இவ்விடத்தில் தான் கேள்வி. எது தர்மம்?! உண்மை பேசுவதா?நன்மை தீமை காண்பதா? இந்த பகுப்பாய்வும் பகுத்தறிவும் இல்லாமல் செயல்படுன் இவர்களை எல்லாம் எப்படி தெய்வமென கருதுவது?!
- அர்ச்சுனனுக்கு இந்திரன் ஒரு சாபம் கொடுப்பான். ‘திருநங்கையாய் வாழக் கடவாய்’ என்றுரைப்பான் தேவர்களின் அதிபதி. என்னவொரு அருமையான சாபம்! திருநங்கையாய் பிறப்பதும் இருப்பதும் தவறா? சாபத்திற்கு இணையானதா?! அசிங்கமான ஒன்றா?! என்ன சொல்ல வருகிறது பாரதம்?!
- இன்னும் ஏராளம். கிருஷ்ணனின் லீலைகள், அதர்ம விளையாட்டுகள், துரியோதனனை பீமன் கொல்லும் முறை, துரோணரை வீழ்த்திய முறை, ஏராளம் ஏராளம்!!
இதுவும் சேர்ந்தது தானே மஹாபாரதம்? ஏன் இந்து மதத்தின் புனித நூல், மாபெரும் இதிகாசம் சமுதாய ஏற்றத்தாழ்வை (சாதியை) தூக்கிப் பிடிக்கிறது? பிறப்பால் உயர்வு தாழ்வை நிர்ணயிக்கிறது? உயர்ந்தோர் புரியும் அதர்மங்களை தர்மமென காண்பிக்கிறது? திருநங்கைகளை தாழ்த்திப் பேசுகிறது?
பதில் தெரிந்தவர்கள் கூறுங்கள்!
-அ.ச.கி.
Comments
Post a Comment