வேடிக்கை பார்த்தவை!

இதுவரை என் வாழ்நாளில் நான் எழுதிய மிக நீண்ட கவிதை இது தான். 2017 - ஒரு பார்வை!

வேடிக்கை பார்த்தவை!

அம்மாவுடன் முடிந்து
அழுக்குடனும் அதிரடியாகவும்
ஆயிரம் அரசியலை
சுமந்தவாறு விடிந்தது 2017!

மாதம் ஒன்று:
தமிழுக்கும் தமிழருக்குமாய்
ஒரு போராட்டம்!
இனி வருடந்தோறும் - எம்
தெருக்களில் ஏரோட்டம்!
இளைஞர் பெருங்கூட்டத்தால்
மனத்தினில் களியாட்டம்!

இளைஞர் மூட்டிய தீயணைக்க
தீவிரவாதம் என்றோர் தீவைத்து
தீர்த்தனர் மாபெரும் யுத்தத்தை
ஆர்த்தனர் தீவிரவாத ரத்தத்தை!

மாதம் இரண்டு:
நாட்டின் உச்ச அரசியலும்
எச்ச அரசியலும் - அதன்
நர்த்தனம் துவங்கிய மாதம்!

சின்னம்மா எழுச்சியும்
அய்யாவின் தியானமும்
சிறையிலே சென்று களித்ததும்
பன்னீரும் ஸ்டாலினும்
பார்த்து பேசி சிரித்ததும்
இம்மாதமே!

காவி வண்ணம் மெல்லமாய்
காலை ஊன்றி நின்றதும்
கால் இல்லாதவரெல்லாம்
நாற்காலியை வென்றதும்
இம்மாதமே!

மாதம் மூன்று:
சோறிட்ட எங்கப்பனும்
மாரிலிட்டு பாலுட்டிய எங்கம்மையும்
தெருவிலிட்டு அநாதையாய் அம்மணமாய்
எலி கடித்து உருண்டிருந்தபோது,
ஏசியிட்ட அறையில்
கைகுலுக்கி
புகைபடத்துக்கு முகம்காட்டி
பல்லிளித்து பரிசளித்து
முதல் பக்கவிளம்பரம் கொடுத்து
மகிழ்ந்திருந்தார்
எம் மேதகு பிரதமரும்
மேன்மைமிகு முதல் மந்திரியும்!
நானும் இதை பார்த்து
மிகக் கோபப்பட்டு
முகம் சிவக்க
உயிர் கொதிக்க
நரம்பெல்லாம் புடைக்கும் வண்ணம்
உக்கிர தமிழால்
முகநூல் நிரப்பி கோபம் தணிந்தேன்!
அரிசியை நான் இன்னும்
அண்ணாச்சி கடையில்தானே வாங்குகிறேன்!
‘அவர்களிடம்’ அல்லவே!

நிலவுக்கு சந்திராயன்
அனுப்பியது நாங்கள் தான்!
இருந்தும்
மலத்தையும் எண்ணெய்க் கழிவையும்
மனிதன் கொண்டு
மனிதம் கொன்று
அள்ளுவதும் நாங்கள் தான்!

எம் தலைவர்களால்
சிவன் சிலை திறக்க கோவை வரமுடியும்!
பாவம் தில்லியில்
எவன் தலை இறக்க பார்வை விழமுடியும்?!

மாதம் நான்கு:
சின்னம்மா அரசியல் போய்
சின்னம் தான் அரசியல் என்றானது!
சின்னத்தனங்கள் எல்லாம்
பட்டவர்த்தனமாய் நடந்திட
பார்வையாளராய் மட்டுமே
மக்களும் தொண்டர்படையும்!

மாதம் ஐந்து:
ஆதிச்சநல்லூர் கீழடி என
ஆதித்தமிழரின் மேன்மை தெரியவர
தோண்டிய மண் கொட்டி மறைக்கலாம்
தோன்றிய புகழ் மண்மூட மறையுமா?
தொன்மை நீ தீண்ட குறையுமா?

உச்ச நட்சத்திரம் ஒளிபடக் குறையும்
அவன் கையசைத்தால்
அடிப்பொடிகள் வாயடைக்கும்!
ஒற்றை தீண்டல் வேண்டி
மணிநேர வரிசையில் நிற்பர்!
ஒற்றை புகைப்படம் வேண்டி
மொத்தமாய் மானம் விற்பர்!
இனமான மக்களே
இம்முறை அதுவும் கிடையாதாம்!

மாதம் ஆறு:
கார்ப்பரேட் கையினின்று
கவர்மெண்ட் கையினில் செல்கிறது
காணி நிலமெல்லாம்!
கதிர் வளையவேண்டிய
கதிராமங்கலம்
கதறிக்கிடக்கிறது!
நெல் விளையவேண்டிய
நெடுவாசலில் - குழாய்கள்
நெருப்பு பற்றி சுழல்கிறது!

மீத்தேன் தந்து சென்ற
மீளா துயருக்கெல்லாம்
பிக்பாஸ் வந்து மருந்திட்டார்!
மீத்தேன் காணாதாரும்
பிரபலங்கள் வெளியேற வருந்திட்டார்!!

மாதம் ஏழு:
முன்பாதி சரிந்ததையெல்லாம்
பின்பாதியில் சரி செய்யலாம்
எழுந்து நிற்க உதவும்
ஏழாம் மாதம் என்றெண்ணியிருந்தோம்!
ஏழை அறை சனி அல்லவோ
எம்மீது ஏறி அமர்ந்தது!

ஒற்றை மதம் இங்கில்லை!
ஒற்றைக் கடவுள் இங்கு சாத்தியமில்லை!
ஒற்றைக் கலாச்சாரம்
ஒற்றை மொழி
ஒற்றைத் தலைவன்
ஒற்றைச் சம்பளம்
ஒற்றை வாழ்க்கை
ஒற்றை சோறு
ஒற்றை தூக்கம்
ஒற்றை வலி
என்று எதுவுமே சாத்தியமில்லாத போது
ஒற்றை வரி மட்டும் எங்ஙனம்?

ஆனால்
ஒற்றை அணி சாத்தியம்!
ஒற்றைத் தலைவி
ஓவியாவுக்கென்று
ஒட்டு மொத்தமாய் திரண்டோமே!
ஒரு புரட்சியே நிகழ்த்தினோமே
எத்துணை பெருமை
எத்துணை கர்வம் கொண்டோம்!
எம் அடையாளம் இதுவென்று
எக்காளப்பட்டோம்!
ஏழாம் மாதம் மீச்சிறப்பு!

மாதம் எட்டு:
அம்மா போனதுடன்
தொப்புள் கொடி அறுந்து
தொடர்பற்று போன
இருபெரும் த(இ)லை இணைப்பு!
தலை இணைய
உயிரையா அறுப்பீர்?
உணர்வையா கெடுப்பீர்?!

மாதம் ஒன்பது:
‘நீட்’(டி) முழக்க விருப்பமில்லை
நேரே சொல்கிறேன்!
கல்வி கொல்ல நினையாதீர்!
கற்றல் வழி கொன்று - எம்மோடு
கலவி கொள்ள நினையாதீர்!

உன்னிலும்
விஞ்சி நிற்றல் கண்டு
அஞ்சித் தான் நின்று
நிந்தித்தாய்
புறவழியே வெற்றியை
சந்தித்தாய்!

போனது போகட்டும்!
மருளோம்!
கண்ணீரில் உருளோம்!
திரள்வோம்!
தெற்கிலிருந்து எழுவோம்!

அட!
திரண்ட கூட்டமெல்லாம் எங்கே?!
ஜிமிக்கி கம்மலின்
ஆடலுக்கு பம்மிக் கிடந்தன!
ஊடகமும் கம்மல்
வளைவுகளையே நம்பிக் கிடந்தன!
அனிதாவின் உடலோடு
மனிதம் இறந்து கிடந்தன!

மாதம் பத்து:
கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால்
தற்கொலை எண்ணம் வாராதாம்!
கடவுள் மட்டும் இருந்திருந்தால்
கந்துவட்டிக் கொடுமை இராதே!
மனிதம் மட்டும் இருந்திருந்தால்
மண்ணெண்ணெய் பற்ற மறுத்திருக்கும்!

கல்நெஞ்சம் கொண்டு இருந்ததனால்
காசே முதன்மை என்றதனால்
காமிராவில் பதிவு செய்ததனால்
கருகி விழுந்து மாய்ந்தாரே!
கடவுள் எங்கே ஆய்ந்தோரே?!
கடவுள் மட்டும் இருந்திருந்தால்
காறி உமிழ்ந்து வந்திருப்பேன்!

மாதம் பதினொன்று:
எழுபது எண்பது ஆண்டாய்
எழுத்து என்பது ஆண்டாய்!
தெற்கிலிருந்து உதித்த
முழுச் சூரிய துண்டாய்!

எழுதாத நாளில்லை
எதிர்க்காத ஆளில்லை
எம்கோன் தமிழ் எழுத - சிறந்ததொரு
எழுது கோளில்லை!

உடன்பிறப்பு கடிதங்கள்
உற்சாக பானங்கள்!
உன் கரகரப்பு மோனங்கள்
உயிர்தடவும் கானங்கள்!

உன் மெய் பேணா திருந்ததனால்!
உன் மை பேனா திருத்தாதனால்!
உண்மை ஏனோ தெரிவில்லை - சொல்
வன்மை இராவணன் வரவில்லை!

இரண்டொரு மாத
இருட்டை விலக்க
சூரியன் உதித்து எழுந்தது!
‘தமிழ் வெல்லும்’ என்றே
முதல் வரி எழுதிட
மொழியும் குதித்து எழுந்தது!

மாதம் பனிரெண்டு:
ஓகியின் ஓசை கேட்டிருந்தாலா
ஓடத்திலா சென்றிருப்பாய்? - இந்த
ஓலத்தின் ஓசை கேட்குமென்றறிந்தால்
ஓகியே நீயும் நின்றிருப்பாய்!

போனவர் எவரும் மேலவர் அல்லர்
மீனவர் தானே மீட்பதும் அல்லர்!
மிதந்திடும் உடலை மீன்தின்று வாழ
மீந்திடும் உடலை யாரென்று காண?

புகைப்படம் போதுமே
பிரதமரும் காண!
நான் என்ன கோலியா
நேரிலே வாழ்த்த?!

நூற்றாண்டு அழுதாலும்
வழியில்லை வாழ!
நூற்றாண்டு விழா போதும்
இந்நாட்டினை ஆள!

ஆர்.கே நகர் போதும்
ஆண்டிடலாம் தெற்கை! - இதை
பாருக்கே பகர் போதும்
கண்டிடலாம் தமிழன்
புகழ்மறையும் மேற்கை!

வருடம் முழுதும்
சேர்த்துவைத்த அழுக்கை
அருவியில் குளி(தி)த்து போக்கினேன்!

இன்னுமே நீளமாய்
இரத்த சிவப்புக் கோளமாய்
தமிழ் உண்டு வளர்ந்த வேழமாய்
தமிழ் நல்லுலகு பற்றி ஆழமாய்
ராகம் குவிய
எழுதிடலாம்!
சோகம் கவிய
அழுதிடலாம்!
கண்ணீர் வழிய
தொழுதிடலாம்!

அத்தனை அத்தனை
அனுபவ அறிவினை
அரசியல் அழுக்கினை
அப்பிச் சென்றது இவ்வருடம்!

வருங்கால மேனும்
நறுங்கால மாய் வா! - இனி
தருங்கால மேனும்
அருங்கால மாய் தா! 2018-ஏ!!
-அ.ச.கி.


இப்படி ஒரு கவிதை வேண்டும் என்று கேட்டு இந்த முயற்சியை துவக்கி வைத்த Vasanth க்கும் நன்றிகள்!

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!