மாமழை போற்றுதும்!
மாமழை போற்றுதும்!
உயரே போகும் மின்கம்பிகளில்
ஊஞ்சலாடும் மழைத்துளி!
காகிதக் கப்பலின்
கேப்டன்களாய் கீழ்வீட்டு சிறார்கள்!
மழையை ரசிக்கிறதா
ஒதுங்க இடம் தேடுகிறதா என்று புரியாவண்ணம்
அலைந்து தாவும் ஒற்றைக் காக்கை!
மாடத்தின் மீதமர்ந்து
சிறகு உலர்த்தும் பறவைகள்!
மழையின் குளிருக்கு இதமாய்
தாய்க்குள் உறங்கிப்போன நாய்க்குட்டிகள்!
என்னைப் போலவே
மழை எழுதும் கவிதைகளை
படித்து பத்திரப்படுத்தும்
எதிர்வீட்டுப் பெண்ணொருத்தி!
மழை என்னவோ வண்ணமின்றிதான்
நிலம் தொடுகிறது!
ஆனால்
இயல்பாய் இருந்த நிகழ்வுகளையெல்லாம்
அழகேற்றி போகிறது!
அதனால்
மாமழை போற்றுதும்!
====•====•====•====
இன்றைய தூக்கத்தின்
ஒரு பாதி தொலைந்திடுமோ
என்று அலைபாயும் கண்கள்!
பாத்திரங்களை விட
ஒழுகும் ஓட்டைகள்
அதிகம் கொண்டிருக்கும் வீடுகள்!
அகண்ட ஒரு மரத்தடிக்கு
கோணி போர்த்தியபடி
குடியேறும் ஒரு குடும்பம்!
(தயவுசெய்து மரங்களை வெட்டாதீர்)
வாழ்தலின் பிடிப்பற்று போகச் செய்யும்
மணிநேர மழைநேரங்கள்!
கந்தல் கொண்டு மூடியிருந்த
அந்தரங்க அவயங்களை கூட
கலைத்து போட்டு வெளிக்காட்டிவிடும்
மூர்க்கத்தனம்!
ஒரே ஒரு ஆகப்பெரும் சௌகரியம் -
மழையில்
நான் அழுவது பிறர் அறிவதில்லை!
அதனால்
மாமழை போற்றுதும்!
-அ.ச.கி.
Comments
Post a Comment