இலக்கியமும் வரலாறும்
இலக்கியமும் வரலாறும்
பெரும்பாலும்
ஊருக்கு ஒவ்வொரு விதமான கதை இருக்கும். குறைந்தபட்சம் ஒரு நாட்டுக்கு ஒரு
பாணியில் கதை இருக்கும், இராமாயணத்தை போல. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான
இராமாயணம் சொல்லப்படும். ஆனால் கிட்டதட்ட எல்லா ஊரிலும், எல்லாரும் அறிந்த
ஒற்றைக் கதை உண்டு என்றால் அது காக்கை கதை. வீட்டிற்கு வெளியே ‘காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள்’ என்பது ஒரு கதை அல்லது நம்பிக்கை. இது கதை அல்ல உண்மை என்று சொன்னால் நம்புவீர்களா? மேற்கொண்டு படியுங்கள். நம்முன் இங்கு பல்வேறு இலக்கியங்களும் வரலாறுகளும் ஊடோடிக் கிடக்கின்றன. அந்த இலக்கியங்களில் பல வரலாறுகள் என்று புகட்டப்படுகின்றன. பல உண்மை வரலாறுகள் நமக்கு சொல்லப்படாமலேயே புதையுண்டு கிடக்கின்றது. அப்படி நாம் இலக்கியங்களையும் வரலாறுகளையும் பிரித்தறிவது? எது வரலாறு எது இலக்கியம் என்று வகுப்பது என்பது பெரும் சிக்கல். உணர்ச்சி வேகத்தில் எல்லா இலக்கியத்தையும் வரலாறாக்கி விட முடியாது, அதை செய்யவும் கூடாது. அதேபோல் நாம் அறியாத காரணத்தால் வரலாற்றை வெறும கதைகளாக மட்டும் இட்டுவிடக்கூடாது.
நம்மிடையே உலவும் பல சிறுங்கதைகள் வரலாற்றை சுமந்து நிற்கின்றன என்று அறிந்தால் அசந்து போவீர்கள். அப்படி ஒரு கதை தான் முதல் பத்தியில் சொன்ன காக்கை கதை. அது எப்படி வரலாறாக நிற்கிறது என்பதற்கான சான்றுகளை பார்ப்போம்.
பொதுவாக எல்லோர் வீட்டிலும் சொல்லப்படும் வாக்கியம் தான் இது. காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள். பொதுவாக விருந்தினர் வந்தால் வீட்டின் முன் கட்டப்பட்டிருக்கும் நாய் குரைக்கும் அல்லது மாடு அலைபாயும். அப்படி இருக்கும் போது அந்த் இரண்டையும் பயன்படுத்தாமல், காகத்தை பயன்படுத்தி ஒரு சொலவடை சொல்வது ஏன்? அறிவார்ந்த சமூகம் என்று சொல்லிக் கொள்ளும் நாம், சற்றும் தொடர்பில்லாத ஒரு கதையை சொல்லி பரப்பியிருப்போமா என்பது சிந்திக்க வேண்டி உள்ளது.
இது இப்படி இருக்க, மெஸப்படோமியாவில் நடந்த அகழாய்வில் ஒரு முத்திரை கிடைக்கப் பெறுகிறது. அந்த முத்திரையில் கப்பலில் மாலுமி ஒருவர், அந்தக் கப்பலின் நுனியில் நின்று ஒரு பறவையை பறக்கவிடுவது போன்று ஒரு ஓவியம் இருக்கிறது. அந்த முத்திரை சிந்துசமவெளிக்கும், மெஸப்படோமியவிற்கும் நடந்த கடல் வாணிபத்திற்கான சான்றாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அடுத்து நம் சங்க காலத்தில் கடல்வழிபயணங்கள் எப்படி அமைந்தன என்று பார்க்கவேண்டும். அன்றெல்லாம் ஆழ்கடல் பயணம் செய்ய மாட்டார்கள். சரியான திசை கட்டும் கருவிகள் இல்லாத காலம் அது. எல்லாம் கரையை ஒட்டிய பயணமாக தான் இருக்கும். அப்படி செல்லும் போது ஒரு கூண்டில் சில காகங்களை அடைத்து உடன் எடுத்து செல்வார்களாம். ஏதாவது ஒரு சூழ்நிலையில் கப்பல் வழிமாறி ஆழ்கடலுக்குள் செல்ல நேர்ந்தால், அவர்கள் தம்முடன் கொண்டு வந்திருக்கும் காகங்களில் ஒன்றை எடுத்து பறக்கவிடுவார்கள். அந்த காகம் நேரே மேலே பறந்து எந்தப் பக்கம் கரை தெரிகிறதோ, அந்த திசை நோக்கி பறக்கும், அதை வைத்து மாலுமியும் கப்பலை அந்த திசையில் செலுத்துவார்.
ஏதாவது ஒரு கடலோர கிராமத்தில் வாழும் ஒருத்தன், திடீரென்று நடுக்கடலில் இருந்து காகம் பறந்து வருவதைப் பார்த்தால் பின்னாலேயே கப்பல் வரும் என்பதைக் அறிகிறான். நடுக்கடலில் இருந்து காகம் பறந்து வர வேறென்ன முகாந்திரம்? இப்படித்தான் அந்த சொலவடை உருவாகிறது. ‘காக்கை கரைந்தால், வீட்டிற்கு விருந்தினர் வருவார்கள்’.
இப்பொழுது முன் பேசிய அந்த முத்திரைக்கான விளக்கம் கிடைக்கிறதா? இதில் குறிப்பிடப்பட வேண்டிய இன்னொரு செய்தி, அந்த முத்திரையில் காலம் சுமார் கி.மு. 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தையதாகும்.
அடுத்ததாய் இது நடந்து ஏறக்குறைய 4000 ஆண்டுகள் கழித்து புத்தர் காலத்தில், புத்தர் தம் சீடர்களுக்கு சொல்வதாய் ஒரு கதை இருக்கிறது. அவர் தம் அறிவுரைகள் எப்படிப்பட்டது என்பதை தம் சீடர்களுக்கு விளக்குகிறார். அதற்கு அவர் இதே காக்கை கதையை தான் கூறுகிறார். ‘வழி தவறிய கப்பல்களுக்கு எப்படி காகங்கள் உதவி செய்கிறதோ, அதுபோல எம் அறிவுரைகளும் உங்களுக்கு உங்களுக்கு உதவும்’ என்கிறார்.
அடுத்ததாய், அதே புத்தர் காலத்தில் எழுதப்பட்ட சங்க காலத்து கவிதை ஒன்று இதே கருத்தை கூறுகிறது. அந்த புலவரின் பெயர் தெரியாததால் நாம் அவரை இன்றுவரை ‘காக்கைப்பாடினியார்’ என்று அழைக்கிறோம்.
இப்படி இன்றும் அது தொடர்பான கதை இன்னும் நம்மூடே உலவிக் கொண்டிருக்கிறது. கருச்சிதைவு இல்லை, பொருட்சிதைவு இல்லை. அந்தக் கதைக்கான காரணம் கூட மறைந்து விட்டது. ஆனால் கதை எப்படி துவங்கியதோ அப்படியே உலவுகிறது. இந்தக் கதையின் பின்னால் சுமார் ஒரு 5000-6000 ஆண்டுகால வரலாறு இருக்கிறது.
இதை நாம் என்னவென்று சொல்வது? இலக்கியமா? வரலாறா?
இன்னும் இது போன்ற பல இலக்கியங்களையும் வரலாறுளையும் எடுத்துக் கொண்டு வருகிறேன். சந்திப்போம்!
-அ.ச.கி.
Comments
Post a Comment