நடுகற்கள்
நடுகற்கள்
கற்கள் எல்லா காலத்திலும், எல்லா
இனத்திலும், எல்லா வரலாற்றிலும் முக்கிய இடம் பெறுகின்றது. உண்மையில் அவை
தான் பல பழம்வரலாறுகளை சுமந்து நிற்கின்றன. இறந்தவீரன் எதிர்காலத்திலும்
பேசப்பட வேண்டும் என்று எண்ணிய நம் முன்னோர் பின்பற்றிய முறை தான்
நடுகற்கள். புறத்திணைகளில் ஏழுவகை, வெட்சி முதல் தும்பை வரை போர் செய்யும் முறைகளை வகுத்திருக்கிறார்கள். அந்த ஒவ்வொரு வகைப்போரிலும் சிறப்பான வீரத்தை வெளிப்படுத்தியவர்களுக்கு நடுகல் எழுப்பப்பட்டிருக்குறது. கூடுதல் ஆச்சரியமாக ஒரு நடுகல் எப்படி இருக்கவேண்டும் என்கிற இலக்கணத்தை ‘தொல்காப்பியம்’ பேசுகிறது. காலம் எல்லாம் பேசப்படவேண்டிய புகழ்வரிகளை சுமந்து நிற்கப்போகும் கல் அது, ஆதலால் நல்ல ‘விளைந்த கல்லாக’ இருக்க வேண்டும் என்கிறான் தொல்காப்பியன்.
விளைந்த கல்லா, விளையாத கல்லா என்பதை மேலோடும் ரேகையை தட்டிப்பார்த்தே சொல்பவர்கள் இன்னும் நிறைய பேர் இருக்கின்றனர். அம்மி செய்யக்கூட விளைந்த கல் தான் தேவைப்படும். விளையாத கல்லில் வைத்து இடித்தால், அம்மியும் இடிந்து போகும்! பின் அதை நன்கு நீராட்டி, நல்லதொரு இடத்தில் நடவேண்டும். அதை தான் ‘கால்கோள்’ இடுதல் என்கிறான் தொல்காப்பியன். இன்றும் விழாக்களின் துவக்கத்தில் கால்கோள் இடுதல் இருக்கிறது. ‘கால்கோள்’ என்ற அந்தச் சொல்லை நட்டுச் சென்றவன் தொல்காப்பியன். அன்று நட்ட கல் சிதைந்து உடைந்தாலும், சொல் உடைந்து சிதையாமல் நிற்கிறது.
நடுகல் பற்றி பேசும் போது குத்துக்கற்களை (Menhirs) பற்றியும் பேசவேண்டி இருக்கிறது. சாதாரண மனிதர்களால் தூக்கி நிறுத்தமுடியாத உயரத்திலும் அளவினிலும் பெரியதாய் இருக்கும் குத்துக்கல் வரிசைகள் எப்படி மனிதன் அமைத்தான் என்பது இன்றுவரை புரியாத புதிர். இதுவரை ஐரோப்பியர்களின் குத்துக்கல் வரிசையை மட்டும் தான் பார்த்திருக்கிறோம், ஆனால் வெம்பூரில் 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு குத்துக்கல் வரிசை இருக்கிறது.
நடுகற்கள் அமைக்கும் வழக்கம் சங்ககாலம் தொட்டே இருக்கிறது என்பதற்கு சான்றாய் பல இலக்கியங்கள் கிடைக்கின்றன. நடுகற்கள் என்பதும் வெறும் வீரத்தின் அடையாளம் என்பதை தாண்டி பழம்நாகரிகத்தின் பெருமை போற்றும் பொருளாகவும் நிற்கின்றன. அசோகர் காலத்தின் தான் எழுத்துமுறை துவங்கியது என்ற ஒரு பெரும்பான்மை கருத்து இருக்கிறது. அதை தகர்த்து எறிந்தது இது போன்ற ஒரு நடுகல் தான்.
அன்றைய காலக்கட்டத்தில் மக்கள் கூட்டம் பெரும்பாலும் வேளாண் சமூகமாக தான் இருந்தது. புறத்திணைகள் ஏழில், முதல் திணை என்பது ஆநிரைகளை (கால்நடைகள்) கவர்ந்து செல்வதும், இரண்டாம் திணை அந்த ஆநிரைகளை மீட்டு வருவதும் ஆகும். அப்படி ஒருமுறை பசுக்களைக் கவர்ந்து வரும்போது தாக்கப்பட்டு இறந்துபோன ‘அந்துவன்’ என்னும் வீரனின் நினைவாக நடப்பட்ட நடுகல் ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புலிமான்கோம்பை (புள்ளிமான்கோம்பை என்பது பயன்பாட்டுப்பெயர்) என்னும் ஊரில் தான் இந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் 2400 ஆண்டுகள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த கல் முழுவதும் தூய தமிழ்சொற்களால் எழுதப்பட்டிருக்கிறது. புலிமான்கோம்பைக்கு அடுத்துள்ள தாதாப்பட்டியிலும் இதுபோன்ற பல நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஒற்றைக்கல் பல வரலாறுகளை உடைத்தெறிகிறது. அசோகரின் புகழ்பெற்ற ஸ்தூபிகள் அமைக்கப்பெறுவதற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிறு கிராமத்தில் ஒரு சாதாரண வீரனுக்காக இந்த கல் அமைக்கப்பட்டிருக்கிறது.
சிந்துசமவெளி நாகரிகத்தில் கூட தங்கத்தால் ஆன அணிகலன் தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கு தங்கத்திலேயே எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அணிகலன்கள் கிடைத்திருக்கிறது. வைகையில் தென்கரையில் எப்படி அந்துவன் நின்று புகழை உரக்கச் சொல்கிறானோ, அதேபோல் வடகரையில் நின்று கோதை என்கிற ஒரு பெண் அறைகூவலிடுகிறாள். அவளைப் பற்றிய குறிப்பை அடுத்த தொகுப்பில் காண்போம்!
-அ.ச.கி.
Comments
Post a Comment