முட்டாள் தினம்!

முட்டாள் தினம்!
-----------------

ஏமாற்றப்படும் சில தருணங்கள்!

விட்டு விடுதலையாகிறோம்
கருவறை எனும்
சிறு அறையை விட்டு - என்றெண்ணி
சிரிக்கும் குழந்தை
சிறைபட்டது பரந்த உலகில்!

தெரிந்த கேள்விகளை
தேர்வு வினாத்தாளில்
தேடும் மாணவன்!

இன்றாவது
என்னை கவனிப்பாளா என்னவள்
என்ற நினைப்பில்
என் கல்லூரித் தோழன்!

கனவில் வடித்த சிலை
உயிர் பெற்றார் போல்
ஓர் மனைவி - என
வேண்டும் வாலிபன்!

இறுக்க மூடியிருக்கும்
பிறந்த குழந்தையின்
பிஞ்சுக் கையை
பிரித்து பார்க்கும் தகப்பன்!

தன் துயரம்
தனயன் அறியக்கூடாது என
தவிக்கும் தந்தை!

இப்படி பல தருணங்களில்
ஏமாறத்தான் போகிறோம்
என்று தெரிந்தே ஏமாறுகிறோம்!
இவையெல்லாம்
நமக்கு சுகம்தரும் ஏமாற்றங்கள்!
இவைதவிர இன்னும் சில...

'நாளை வீட்டுக்கே வரும்
உன் உதவித்தொகை' என
உரைக்கும்
உயரதிகாரி சொல்கேட்டு திரும்பும்
ஊன்றுகோல் கிழவன்!

'மூன்றே மாதத்தில்
மும்மடங்கு பணம்' எனக் கேட்டு
மும்மரமாய்
முதலீடு செய்யும்
முட்டாள் சாமான்யன்!

'வளமான இந்தியாவை உருவாக்குவோம்' என
வரலாற்று காலம் தொட்டு
வஞ்சகம் இல்லாமல் பொய்யுரைக்கும்
அரசியல் ஆன்றோனின் பேச்சை
அகலவாய் பிளந்து கேட்கும்
அடிமட்டத் தொண்டன்!

இன்னும் ஓர்முறை
இவருக்கே வாக்களிப்போம் என மீண்டு(ம்)
தவறுக்கே வாய்ப்பளிக்கும் - கடமை
தவறா குடிமகன்!

தெரியாமல் தான் கேட்கிறேன்
இப்படி ஏமாறுவதில்
அப்படி என்ன சுகம் கண்டீர்?!

ஆனால்
நிச்சயம் ஒன்று உறுதி!
நீவிர் தான்
முட்டாள்தினம் கொண்டாட
முழுத்தகுதி கொண்டவர்!!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!