நான் ஏங்கித்தவிக்கும் சில தருணங்கள்!!!

நான் ஏங்கித்தவிக்கும் சில தருணங்கள்!!!

ஒவ்வொரு நாளும்
விழித்து எழும்போது - உன்
விழியில்
விழுந்து எழவேண்டும்!!

நீ
தூங்கி விழும்போது
என் மடியையே
தூளி ஆக்கி
தாலாட்ட வேண்டும்!!

சிறிதும் பெரிதுமாய்
நான் செய்யும் தவறுக்கு
சிலிர்த்திடும் உன் புன்னகையால்
தண்டிக்க வேண்டும்!!

தோல்வியால்
துவண்டு விழும்போது
தோள் கொடுத்து
தேற்றி விடவேண்டும்!!

உன்னுள்
வலி வலுக்கும்போது
என் மார்பில் - உன்
முகம் சாத்தி,
முத்தத்தால் உடல் போர்த்தி
கதகதப்பு சேர்த்திடுவேன்!!

சோகம் சூழ்ந்துகொண்டு வருத்தும்போது
உன் மார்பில்
முகம் புதைத்து
மல்கும் என் கண்ணீரை
தேக்கவேண்டும்!!

சிரித்து
சிலாகித்து மகிழ்ந்திருக்கும்போது
முத்தத்தில் உன்னை
மூழ்கடிக்க வேண்டும்!!

சில மாலைகள்
சின்னக் குழந்தைகள் போல
சிணுங்கல்களுடன்
செலவிட வேண்டும்!!

வாரக் கடைசியில்
உனக்கு விடுமுறை அளித்து
வித்தியாச சமையல் செய்வேன்!
சில சமயம்
உன்னையே சமைப்பேன்!!

தூரத் தெரியும்
பெயர் தெரியா ஊருக்கு
உன்னுடன் கைகோர்த்து
தோளோடு தோள் உரசிக்கொண்டு
தூறல் மழைதனில்
தொப்பலாய் நனைந்து கொண்டு
தொடர்ந்து நடக்கவேண்டும்!!
       -..கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!