நீல நிறப்புடவை!
நீல நிறப்புடவை!
பார்வை பட்டதுமே
பரிதவிக்க விட்டுடுமே!
அதுபோல் இல்லை!
காதுமடல் கண்டதுமே
காதல் கிசுகிசுக்குமே!
அதுபோல் இல்லை!
வசதியாய் நேரம்கிடைத்தாலும்
வார்த்தைகள் தடுமாறுமே!
அதுபோல் இல்லை!
விரல்நுனி பட்டாலும்
விசுக்கென்று விலகிடுமே!
அதுபோல் இல்லை!
கன்னக்குழி அழகென்று
கவிதை எழுதிடுமே!
அதுபோல் இல்லை!
கண்டதுமே காதல்
கண்ணுக்குள் கலங்கடிக்குமே!
அதுபோல் இல்லை!
கண்ணே! கலைமானே!
காவியமொழி கேட்டிடுமே!
அதுபோல் இல்லை!
இமைகள் கொண்டே
இதழ்கள் வருடப்படுமே!
அதுபோல் இல்லை!
இரவின் நீள அகலங்களை
அலைபேசி அழைப்புகள் அளந்திடுமே!
அதுபோல் இல்லை!
இங்கும் அங்குமாய் சில உரசல்களில்
உயிர் துளிர்த்திடுமே!
அதுபோல் இல்லை!
காதல் மனங்களில்
கலர் கனவுகள் வியாபித்திருக்குமே!
அதுபோல் இல்லை!
விரல் இடுக்குகளில்- ஆண் பெண்
விரதங்கள் நசுக்கப்படுமே!
அதுபோல் இல்லை!
இப்படி எதுபோலும் துவங்கவில்லை
நம் காதல் நொடிகள்!
பேசியே பழகினோம்!
பழகுதல் வேண்டியே பேசினோம்!!
அவை எல்லாம் - என்
உயிர் உணர்ந்த நொடிகள்!
உணர்வு இழந்த நொடிகள்!!
நம்மிடையே வளைந்தோடிய
அலைநீளங்கள்
அளக்கமுடியாததாய்!
கடைவீதியில் எதேச்சையாய்
கண்ணில் பட்ட நீலநிற சேலை
உன்னை நினைவூட்ட,
சேலையோடு உன்னை
சேர்த்தி பார்க்கவேண்டி
கையோடு வாங்கிவந்தேன்!
இப்படி -
எங்கும் உன் நினைவுகளே அண்டிக்கிடக்க,
நம்மிடையே சிக்கிக்கிடந்தது
காதல்தானா என்று
மூளைக்கும் மனதுக்கும்
மூண்டிருந்த விவாதத்தை
கலைத்து போட்டது - உன்
கல்யாண பத்திரிக்கை!!
இறுதிவரை
பொம்மையை சுற்றியிருந்த சேலையில்
உம்மை சுற்றிப் பார்க்க,
கண்கள் கடன்படவில்லை!
என்றேனும் ஒருநாள்
என் எழவுக்கேனும் ஒருநாள்
அந்த புடவைகட்டி வா
என் பிணம் வெந்துதீரும்!
என் பார்வை உரசாத
அந்த சேலையின் முந்தி உரசி
நான் எழுந்திடக்கூடும்!
-அ.ச.கி.
Comments
Post a Comment