கண்ணாடி வழி சிரிக்கும் கண்ணிரண்டு!

கண்ணாடி வழி சிரிக்கும் கண்ணிரண்டு!

பொன்னே பொன்னை போல்
பொண்ணு மூணு பெற்றமகராசி!
கண்ணே கண்ணு போல
காத்து வளர்த்த மகராசி!!

உன் நடை தளர்நடை தான்!
உன் நெஞ்சு உளர்கடை தான்!

ஒடுங்கி கன்னம் சிறுத்தாலும்
உடையா உளம் உனது!
நடுங்கி குரல் குழைந்தாலும்
கிடையாது ஓய்வென்பது!

உறவுகூடும் நாளெல்லாம்
உற்சவ பெருவிழாதான்!
அந்நாளில்
ஆளைஉருக்கும் ஆஸ்மாவும்
அடியிரண்டு தள்ளிநிற்கும்!

பொத்தி பொத்தி
பார்த்திருந்த உன்னை
புதைத்துவிட்டோம் என்கிறார்கள்!

பொக்கை வாய்ச் சிரிப்பை
இனி காணுவதெங்கே?!

வெற்றிலை கொட்டுரலில்
புறப்படும் ஸ்வரங்கள்
இனி கேட்பதெங்கே?!

குடும்பம் குழுமியிருக்க
உணர்வுகள் பரிமாறி
உருண்டை சோறு உண்பதெங்கே?!

அர்ச்சுனக் கதைகள்
சொல்வதற்கு இனி யாரிங்கே?!

அரிச்சுவடிகள் இணையாகுமா
அனுபவச் சுவடுகளுக்கு?!

நினைவுகள் கோடி
கொட்டி வளர்த்த
நிமிடங்கள் எல்லாம்
கொதிமணலில் புதைகிறது!

புதைந்த அந்நொடிக்குள்
புகும் வழி கிடைத்தால்
உன் இறுதி நொடி திரட்டி
ஒளித்து வைப்பேன்!

என்ன சொல்லி
என்ன செய்ய!
கண்ணாடி வழி சிரிக்கும்
கண்ணிரண்டை
கடைசியாய் ஒரு முறை
கண்டிருக்கலாம்!
-அ.ச.கி.

Comments

Popular posts from this blog

அக்கா மகள்!

ஓ! இளைய பாரதமே எழுக!!

சாதிவாரியான இட ஒதுக்கீடு!