நீட்! (NEET)
நீட்! (NEET)
பல்வேறு கருத்தாடல்கள். மிகக்குழப்பமான சூழல். அரசாங்கம் நம் நல்லதுக்குதான் செய்கிறது என்கிறார்கள். தரம்வாய்ந்த தகுதிவாய்ந்த மாணாக்கர் மட்டுமே மருத்துவர் ஆவர் என்கிறார்கள்.எல்லாத்தையும் விட்டு விடுவோம் எனக்கு ஒரே ஒரு கேள்விதான்.
இந்த அரசாங்கம் நம் நல்லதுக்குதான் செய்கிறது என்று கொள்வோம். எனில் நீவிர் சொல்லும் நல்லதையும் அந்த அரசாங்கமே செய்யலாம் அல்லவா?
1. மாநில பாடத்திட்டத்தை மாற்றுவது. இன்னும் தெளிவாகச் சொன்னால் நீங்கள் சொல்வது போல் தரமில்லாத இந்த பாடத்திட்டத்தை மத்தியக் கல்வித்தரத்துக்கு உயர்த்தலாமே?
2. நம்மைவிட கல்வியில் இன்னும் பின் தங்கியுள்ள மாநிலம் ஏராளம். அவற்றை சரி செய்யலாமே?
3. எல்லா மாநிலங்களில் முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் ஆட்சியில் இருக்கும் வட மாநிலங்களையாவது சரி செய்யலாம்.
4. அதை எப்படி மத்திய அரசு செய்யலாம் என கேட்பின், உயர்படிப்பில் மட்டும் கைவைக்க உரிமையும் உணர்வும் பெற்றிருக்கிறதா மத்திய அரசு?
5. இந்தபாடத்திட்டத்தில் 'மனித உடல்கூறியலை' விட்டுவிட்டு படித்தாலே உயர் மதிப்பெண் எடுக்கமுடியும் என்கிறீர்களே, நீட் தேர்வுக்கும் நிச்சயம் நீங்கள் கூறும் 'மதிப்பெண் செயல்திட்டம்' (blueprint) இருக்கும்.
6. அதற்கான பயிற்சி நிலையங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் போனால் அந்த செயல்திட்டம் இதுவென கண்டறிந்து அதன் வழியில் பயிற்றுவிக்கும். (இந்த வருடமே அதை தயார் செய்திருந்தால்கூட ஆச்சரியம் இல்லை)
7. இது இன்னொரு 'மாஃபியாவை' தான் உருவாக்கும். இன்னும் சில ஆண்டுகள் போனால் இன்று இருக்கும் பெரும்பள்ளிகளே நீட் பயிற்சிக்கென்று தனிக்கட்டணம் போட்டு தாமாகவோ, அல்லது வெளிநிறுவனங்கள் மூலமோ தம் மாணவர்களை பயிற்றுவிக்க துவங்கும். பணம் கொழிக்கும் சந்தையாக மாறிப்போகும் 'நீட்'
8. நீங்கள் சொல்லலாம், ஏன் உத்திரவாதமே கூட கொடுக்கலாம். நிச்சயம் மருத்துவம் படிக்கும் பெரும் ஆசை கொண்ட மாணவர்கள் அந்த அட்டவணையையோ , செயல்திட்டத்தையோ (blueprint) பின்பற்றமாட்டார்கள். அனைத்தையும் படிப்பார்கள் என்று. எனில் அதே உத்திரவாதம் இன்று இருக்கும் பாடத்திட்டத்துக்கும் பொருந்தும்.
9. இதெல்லாம் விட்டு விடுவோம் நம்மீது அதீத அக்கறை கொண்டது இந்த மத்திய அரசு என்றே கொள்வோம். எனில் அதற்கான பயிற்றுவிப்பு நிலையங்களையும் அதை ஏற்படுத்தியிருக்கலாம். சலுகைவிலையில் பாடம் சொல்லி தரலாம். மாணவர்கள் நலன்கருதி. அதை செய்யாமல் ஏன தனியாருக்கு தாரை வார்க்கிறது?
10. இதுநாள்வரை இந்தப்பாடத்திட்டத்தில் படித்து மருத்துவராக இருந்தவரிடம் தான் நாம் மருந்து வாங்கினோம். ஊசி போட்டுக்கொண்டோம். எனில் நாமெல்லாம் தரமற்ற மருத்துவர்களையா கொண்டாடினோம்?!
11. தமிழ்நாடு மருத்துவ தலைநகர் எனும் அளவு வளர்ந்திருக்கிறது. 'ஆரம்ப சுகாதார நிலையம்' இங்கு இருப்பது போன்று எந்த மாநிலத்திலும் சிறப்பாக செயல்படுவதில்லை. 'தாய் சேய் இறப்பு விகிதம்' கேரளத்துக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது. இதெல்லாம் எங்கள் தமிழ்நாட்டு கல்விமுறை சாத்தியப்படுத்தியது தான்.
12. இதற்கெல்லாம் மேல் நீங்கள் சொல்வது தான் சரி என்று கொண்டாலும், என் தாத்தனும் அப்பனும் கட்டிய வரியில் கட்டிய கல்லூரியை வேறொரு ஆளுக்கு தாரைவார்ப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை. இதை நீங்கள் சுயநலமென்றுகூட சொல்லிக்கொள்ளுங்கள். நாங்கள் இப்படிதான்.
13. நீங்கள் சொல்லும்படி எங்கள் மாநில கல்விமுறை மட்டம் என்றே கொள்வோம். எனில் உங்கள் உயர்ந்த, தரம் மிகுந்த கல்விமுறையில் (CBSE) பயின்ற மாணவர்களை நீட் தேர்வுக்கென்று எந்த சிறப்பு பயிற்சியும் இன்றி எழுதி இதே மதிப்பெண்ணை எடுக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்! அல்லது தரமில்லாத எங்கள் மாணவர்கள் எழுதும் மாநில பாடத்திட்டத்தை எழுதி மதிப்பெண் எடுக்க சொல்லுங்கள். இரண்டும் முடியாத காரியம். ஏனெனில் எந்த பாடமாய் இருந்தாலும் உரிய பயிற்சி இல்லாமல் தேர்ச்சி சாத்தியம் இல்லை, அவர் எத்தகைய கல்விமுறையில் பயின்றிருந்தாலும்!
14. மாநில உரிமைகளை விட்டுத்தருவதால் ஏற்படும் தீமைகள் நமக்கு புலப்படவே பல ஆண்டுகள் பிடிக்கும். இன்று எப்படி பல்வேறு ஆண்டுகள் கழித்து இந்தி எதிர்ப்பை கையில் எடுக்கிறதோ, அதுபோல் ஒரு விழிப்புணர்ச்சி இந்த விடயத்திலும் இந்நாட்டில் நிச்சயம் ஏற்படும். அன்று இன்றைய தமிழ்நாட்டின் எதிர்ப்பு மேற்கோள் காட்டப்படும்.
15. இறுதியாய் ஒன்று. பல்வேறு இனங்கள் கூடி ஒற்றைத்தேசமாய் வாழும் நாட்டில் நிச்சயம் எல்லாம் ஒரேமாதிரி இருக்க முடியாது. இருக்கக்கூடாது.
-அ.ச.கி.
#NEET #manuNEETi #PleasePesungada
Comments
Post a Comment