தலித்தியம்!
தலித்தியம்!
சமீபத்தில் அனிதா சம்பவத்தின்போது 'தலித்' என்ற சொல்லாடலை பயன்படுத்திய போது பெரும்பாலானோர் அதை எதிர்ப்பதை பார்த்தேன்! எதிர்த்த அனைவரும் நல்நோக்கோடு தான் அதை செய்தார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அப்படி சொல்லவதால் நன்மை தான் விளையும் என்பது என் தாழ்மையான கருத்து. அதற்கான காரணங்கள்:-முதலில் தலித் என்பது ஒரு சாதி பெயர் அல்ல. ஒரு இயக்கம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கென குரல் கொடுக்க துவங்கிய இயக்கம்.
-தலித் என்பதால் ஒருவன் தாழ்த்தப்பட்டவன் என்பதில்லை. ஒருவன் ஒடுக்கப்பட்டதால் அவன் தலித் என்ற ஒற்றை குடையினுள் நின்று தன் எதிர்ப்புக் குரலை பதிவிடுகிறான்.
-இப்படி எண்ணிப்பாருங்கள்:-
=>ஒரு மாணவி 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண் எடுத்தாள்.
=>ஒரு தலித் மாணவி 12ஆம் வகுப்பில் 1176 மதிப்பெண் எடுத்தாள்.
மேற்சொன்ன இரண்டுமே ஒரே செய்திதான். ஆனால் இரண்டாம் வரியை படிக்கும்போது நம் உணர்வு சற்று மேலோங்கும். ஏனெனில் 'தலித்' எனும்போது அவளின் தினசரி வாழ்க்கை, அதன் கஷ்டங்கள் அனைத்தும் உடன் சேரும். அதை தாண்டி அவள் சாதித்திருக்கிறாள் என்பதுதான் நம்முள் அவ்வுணர்ச்சி பெருக்கின் காரணம். அந்த உணர்ச்சி பெருக்கு மகிழ்ச்சி அடையும்போது மட்டுமல்ல, கோபப்படும்போதும் வேண்டும் என்றால் அந்த சொல் சேர்ப்பதில் தவறில்லை!
-அவளை தலித் என்று சொல்லாமல் போனால், இன்னும் சில ஆண்டுகளில் 'அதான் எல்லாரும் சமம்-னு சொல்லியாச்சுல அப்புறம் எதுக்கப்பா இடஒதுக்கீடு? முழுமையும் பொது நுழைவு தேர்வாக்கு' என்றொரு கும்பல் நிச்சயம் கிளம்பும். ஆனால் அன்றும் அனிதாக்கள் இருப்பார்கள். அன்று என்ன செய்வோம் நாம்?
-எனினும் அவர்களை தலித் என்று சொல்லி இறுதி வரை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்பதில்லை நோக்கம். உண்மையாய் அவர்கள் வாழ்க்கை நிலை உயரும் வரை, தொடர்ந்து இரண்டு தலைமுறைகள் படிக்கும் வரை, பெயரளவில் இல்லாமல் உண்மையான சமன்பாடு ஏற்படும்வரை, உண்மையான ஒழுங்கான வளர்ச்சி ஊர் முழுதும் ஏற்படும்வரை, அனிதாக்கள் தற்கொலை செய்ய தேவையில்லாத நிலை ஏற்படும்வரை அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் தவறில்லை.
-மீண்டும் சொல்கிறேன். அவள் தலித் என்பதால் ஒடுக்கப்படவில்லை. ஒடுக்கப்பட்டதால்தான் 'தலித்' ஆனாள். எனவே, ஒடுக்கப்படுவதை ஒழியுங்கள். ஒடுக்குபவர்களை ஒழியுங்கள். 'தலித்' என்ற சொல்லின் தேவை தானாக மறைந்துவிடும்.
(பி.கு: சில மதவாத ஊடகங்களும், செய்தி அமைப்புகளும் தங்கள் சாதி வெறியை காண்பிக்க 'தலித்' என்பதை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். அவர்களுக்கு என் உளத்தின் அடியில் இருந்து ஓர் உஷ்ணமான கண்டனம்)
Comments
Post a Comment